இளம் உள்ளூர் உற்பத்தியாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கிய எரிவாயு தட்டுப்பாடும், மூலப்பொருட்களின் விலையேற்றமும்..
(கட்டுரையாளர் - றிஸ்வான் சாலிஹு)
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் ஆகியவை இளம் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்வில் பாரிய நெருக்கடியையும், அவர்களின் வாழ்க்கையில் போராட்டங்களையும் சந்திக்க வைத்தமையை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும்.
இந்த நெருக்கடியான நிலைமை தலைநகர் தொடக்கம் கிராமப்புறங்களிலும் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதிப்படையைச் செய்தது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
அந்ந வகையில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இருக்கும் உள்ளூர் இளம் உற்பத்தியாளர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சி பிரிவு ஆகிய அரச நிறுவனங்களின் கீழ் முறையாக வழிகாட்டல் மற்றும் பயிற்சி பெற்ற சுமார் 50 இளம் உற்பத்தியாளர்கள் இருக்கின்றார்கள். இதில் பெரும்பாலனோர் எரிவாயுவை மாத்திரம் நம்பி தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்களாவார்கள்.
இதிலுள்ள அநேகமானவர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தங்களுடைய தொழிலை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்ல முடியாத நிலைக்கு ஆளாகி தங்களிடம் இருந்த சகல முதலீடுகளையும் இழந்த நிலையிலும், இன்னும் சிலருக்கு முதலீடுகள் இருந்தாலும் எவ்வாறு தொழில் செய்வது என்ற யோசினையில் தங்களை மாட்டிக்கொண்டவர்கள் தான் அதிகம் என்று கூற முடியும்.
இச்சந்தர்ப்பத்தில் இந்த நெருக்கடியான நிலைமையினால் தொழிலை இழந்த ஒரு உள்ளூர் இளம் உற்பத்தியாளர் உ.மு.தில்ஷான் கருத்து தெரிவிக்கையில்,
நான் சுமார் மூன்று வருடங்களாக பழச்சாறு வகையான பானங்களை தயாரித்து முறையான முறையில் இளம் உற்பத்தியாளர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக எமது தயாரிப்புக்களை எந்தவித தங்குதடையின்றி செய்து வந்தோம். எங்களை நம்பி தொழிலாளர்களும் எங்களிடம் தொழில் செய்தார்கள். கொரோனா காலகட்டத்தில் சிறிதளவு எமது தொழிலில் வரட்சி ஏற்பட்டாலும் அதன் பின்னர் நிலைமை சரியாக வந்தது.
அதன் பின்னர் தற்போதைய எரிவாயு மற்றும் இந்த உற்பத்தி பொருட்களுக்குரிய மூலப்பொருட்களின் விலையேற்றமும், அப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு சந்திக்கும் பிரச்சினைகளும் அதிகமாக இருந்தது. ஆரம்பத்தில் குறைவாக கஸ்டம் இருந்தாலும் பின்பு வந்த நாட்களில் எமது தொழிலை முன் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு நாம் ஆளாகினோம். மூலப்பொருளை அதிக விலைக்கு வாங்கினாலும் இதனை உற்பத்தி செய்வதற்கு 100 வீதம் எரிவாயுவின் தேவைதான் அதிகமாக இருந்தது. அதனை பெற்றுக் கொள்ள பல முயற்சிகள் செய்தாலும் பலனளிக்காத நிலையில் எமது பிரதேசத்தை சேர்ந்த உற்பத்தியாளர்கள் பிரதேச செயலாளர் ஊடாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு எரிவாயுவை பெற்றுத்தரும் படி வேண்டினாலும் அதுவும் இயலாத காரியாமாகவே போனது.
இவ்வாறான நிலையில் எரிவாயு மற்றும் மூலப்பொருள் கிடைத்தாலும் இதனை உற்பத்தி செய்து அதிகமான விலைக்கு விற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்வாங்கி இருந்தாலும் தற்போது இதனை வாங்குவதற்கு பொதுமக்கள் பின்வாங்குகின்றார்கள் ஏனெனில் அதிகமான விலை கொடுத்து வாங்க தேவையில்லை என்ற காரணத்தால். எனதே, நாங்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட நிலையில் நடுத்தெருவில் வந்துள்ளோம் என்பதைத்தான் கூற முடியும் என்று அந்த இளம் உற்பத்தியாளர் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் உள்ளூர் உற்பத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடயத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் இதர அரச நிறுவனங்கள் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதோடு, எதிர்வரும் காலங்களிலாவது சரி உற்பத்தியாளர்களுக்கென பிரத்தியேகமான முறையில் எரிவாயு மற்றும் முக்கியமான உற்பத்தி பொருட்களை உடனடியாக பெற்றுக் கொடுப்பதற்கு வழிவமைத்து கொடுப்பதே நாம் அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு செய்யும் உதவி என்பதை கவனத்தில் கொள்வோமாக.
இளம் உள்ளூர் உற்பத்தியாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கிய எரிவாயு தட்டுப்பாடும், மூலப்பொருட்களின் விலையேற்றமும்..
Reviewed by Sifnas Hamy
on
August 12, 2022
Rating:
