மூவின மக்களும் நன்மை பெறும் வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்ட இருதய நோய் சிகிச்சைப் பிரிவு
(கட்டுரையாளர் -றிஸ்வான் சாலிஹு)
அம்பாறை மாவட்டத்தின் பாணமை தொடக்கம் கல்முனை வரையிலான கரையோர பிரதேசத்தில் உள்ள மூவின சமூகங்களும் சிறந்த முறையில் சிகிச்சை பெறும் வகையில் இம்மாவட்டத்தின் மத்தியில் சுகாதார அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட்ட வைத்தியசாலை தான் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை என்பதாகும்.
இவ்வைத்தியசாலையின் வளர்ச்சிப் பாதையில் மற்றொரு மைக்கல் தான் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இவ்வைத்தியசாலையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கி கொண்டிருக்கும் இருதய நோய் சிகிச்சைப்பிரிவு.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் ஆஸாத் எம் ஹனீபா அவர்களின் அயராத முயற்சியினாலும், இப்பிராந்திய மக்களுக்கான இத்தேவையை அறிந்து சுகாதார அமைச்சினால் இவ்வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட இருதய நோய் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஏ.நெளசாட் அலியினால் வைபவ ரீதியாக இப்பிரிவு திறந்து வைக்கப்பட்டது.
தென்கிழக்கு பிராந்திய மக்களிடையே அதிகளவாக தற்போது காணப்படும் தொற்றா நோய்களுக்குள் இருதய நோய், மாரடைப்பு மற்றும் உயர் குருதியமுக்கம் முக்கிய இடத்தில் காணப்படுகின்றன. இதனால் தற்காலத்தில் திடீர் மாரடைப்புகளால் இளவயது மரணங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டிப்பதை யாவரும் அறிந்தும் கேள்வியுற்றும் இருக்கின்றோம். ஆனால், இதற்கான முறையானதும் , உடனடியானதும், உயர்தரத்திலும் சிகிச்சை வழங்குவதற்கான தேவையை அறிந்து இருதய விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நெளஸாத் அலியின் புதிய நியமனம் கிழக்குப் பிராந்திய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். அத்தோடு இருதய நோய்க்கான சகல சிகிச்சையையும் விசேட வைத்திய நிபுணரால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மூவின சமூகங்களும் பெற்றுக்கொள்ளலாம் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திறப்பு நிகழ்வின் போது தெரிவித்தார்.
இச்சிகிச்சைப்பிரிவு திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்ப நாளின் போதே முதலாவது இருதய நோயாளிக்கான சிகிச்சையும் விசேட வைத்திய நிபுணரினால் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வைத்தியசாலையில் கதிரியக்கவியல், தோல் மருத்துவம், உட்சுரப்பியல், ஹிஸ்டோபோதாலஜி, சிறுநீரகவியல், கண் மருத்துவம், மனநல மருத்துவம் போன்ற மேலும் பல துணை மருத்துவ சேவைகளின் மூலம் இப்பிராந்திய மக்கள் பெரிதும் நன்மை அடைகின்றார்கள்.
பல சிரமங்களுக்கு மத்தியில் ஏனைய மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கான சிகிச்சையை இதற்கு முன்னர் பெறுவதற்கு சென்ற நமக்கு, தற்போது காலடியில் இச்சேவையை வழங்கி எம் சமூகத்தின் கஷ்டங்களை குறைத்த சுகாதார அமைச்சுக்கும், வைத்திய அத்தியட்சகர், விசேட வைத்திய நிபுணர் மற்றும் ஏனைய வைத்தியர்கள் உத்தியோகத்தர்களும் இப்பிராந்திய மக்கள் நன்றி தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 11, 2022
Rating:

