கற்சேனை வயல் (ரஹ்மத் நகர்) குடியிருப்பும், மஸ்ஜிதுர் ரஹ்மா இறை இல்லமும்

- ஐ.எல்.எம். தாஹிர் - 

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கீழ் அமைந்துள்ள விவசாயக் காணிப் பிரதேசம் கற்சேனை (வில்லு வட்டை) எனப்படும் முன்னோர்கள் வழிவந்த பழைமை வாய்ந்த வயலும், வயல் சார்ந்த குடியிருப்புப் பிரதேசமுமாகும். 

கணிசமான தொகையினரைக் கொண்ட அட்டாளைச்சேனைப் பிரதேச விவசாயிகளினால் விவசாயச் செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன், அங்கு விவசாயிகள் குடியேறியிருந்த கடந்து விட்ட கால சரித்திர வரலாறும் எமக்குப் பாடம் கற்றுத் தருகின்றன.

சுமார் 250 ஏக்கர் பாய்ச்சல் நெற்காணிகளாகவும், 300 ஏக்கர் மேட்டு நெற்காணிகளாகவும் காணப்படும் இவ் விவசாய வயல் பிரதேசத்திற்கு ‘வில்லு’ வட்டை என்றும் பழைய பெயர் கொண்டு அழைப்பதுண்டு.

இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் இக்காணிப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சுமார் 15 குடும்பங்கள் அன்று அங்கு குடியேறித் தங்களது ஜீவனோபாயத்தை வழி நடாத்தி வந்தமை பெருமைப்பட வேண்டிய விடயமாகும். 

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர், ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர், வளர்ந்தோர் கல்வி அதிகாரி, இத்தியாதி பதவிகளை அலங்கரித்து மறைந்து விட்ட மர்ஹூம் ஈ.எல்.எச். சுலைமாலெவ்வை என்பவரினால் இவ் வயல் பிரதேச கிராமத்திற்கு “ரஹ்மத் நகர்” எனப் புதிய பெயர் சூட்டப்பட்டு அழகுபார்த்த பெருமை அன்னாரையே சாரும். இத்தருணத்தில் அன்னாரை நினைவிலிருத்திப் பேருவகையடைகின்றேன். 

அப்பொழுது போக்குவரத்து மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச். முஹம்மத், பாராளுமன்ற சபாநாயகர் மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மார்க்கார் போன்றோர் இக் கிராமத்திற்கு வருகை தந்து அங்கு பள்ளிவாசல் ஸ்தாபிப்பதற்காக ஆரம்ப நிதியாக அமைச்சர் எம்.எச். முஹம்மதினால் ரூபா 15 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டதாக சுமார் 24 வருடங்கள் வட்டை விதானையாக கடமையாற்றிய ஓய்வு பெற்ற அஹமட் லெவ்வை நெய்னா முஹம்மத் என்பவர் தெரிவித்தார்.

மஸ்ஜிதுர் ரஹ்மா எனும் பெயர் கொண்டு ஓலைக் கூரையினால் வேயப்பட்ட இறையில்லம் ஒன்று அங்கு ஸ்தாபிக்கப்பட்டு சிறப்பேற இயங்கிக் கொண்டிருந்ததான வரலாறும் எம்மை உணர வைத்து ஞாபகப்படுத்துகின்றது. இந்த இறை இல்லத்தின் பேஷ் இமாமாகவும், குர்ஆன் மத்ரஸா ஒஸ்தாதாகவும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மறைந்த மர்ஹூம் சின்னலெப்பை முகம்மது யூசுப் என்பவர் கடமை பார்த்திருந்தார்.

ஐ வேளைத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை ரமழான் மாதத் தறாவீஹ் தொழுகை உட்பட குர்ஆன் மத்ரஸாவும் இங்கு நடாத்தப்பட்டு வந்தன. அக்காலத்தில் இப் பள்ளிவாசலில் மார்க்க உபந்நியாசங்கள் நேர்த்தியான முறையில் வழிநடாத்தப்பட்டதுடன் அங்குள்ள மக்களால் அவ் இறை இல்லமானது பூரண நிலையில் உயிர்ப்பிக்கப்பட்டு ரமழான் மாதம் முழுவதும் அமல்களால் சிறப்பிக்கப்பட்டு விசேட பயான்களும் நடாத்திக் கொண்டிருந்த பேஷ் இமாம் பட்டக் கல்யாணம் சூட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்ட நிகழ்வையும் இத்தருணத்தில் கேட்டறிந்து மகிழ்ச்சிப்பட வேண்டியிருக்கின்றது.

இவ்வேளையில்தான் சடுதியாக ஏற்பட்ட பயங்கரவாதப் பிரச்சினையால் அங்கு குடியேறியிருந்த விவசாயப் பெருமக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து அவ்விடத்தை விட்டும் வேளியேறினர். இதன் காரணமாகப் பள்ளிவாசல் பல வருடங்களாக மூடப்பட்டிருந்தது. குடியிருப்பு வீடுகள் அழிந்து போயிருந்தன. இருப்பினும் விவசாய நெற் காணிகள் மட்டும் செய்கை பண்ணப்பட்டு வந்தன. 

பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்த சுமார் 40 குடும்பங்கள் தற்பொழுது அங்கு குடியமர்த்தப்பட்டு இறைவனின் உதவியால் இறை இல்லமானது ஐ வேளைத் தொழுகையுடன் ஜும்ஆத் தொழுகையும் நடாத்தப்பட்டு மகிழ்ச்சிக் கிராமமாக மிளிர்ந்து கொண்டு வருவதும் இவ்வேளை பாராட்டப்படவேண்டிய விடயமாகும். 

இந்த வயல் கிராமத்தைச் சுற்றிச் சூழ வாழ்ந்து கொண்ருக்கும் பெரும்பான்மை பௌத்த மதச் சகோதரர்கள் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றாகிய முஸ்லிம் இன மக்களோடு அந்நியோன்யமான முறையில் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருப்பது இன நல்லுறவுக்கோர் முன் உதாரணமாவதுடன், தொடரும் காலங்களிலும் இவர்களின் ஒற்றுமையான வாழ்க்கையானது மகிழ்ச்சிப் பூக்களாக மலர்ந்து மணம் வீச வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

எந்த ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அமைதியான, இங்கிதமான, சூழலில் இயற்கை வளங்களுடன் காட்சியளிக்கும் ரஹ்மத் நகர் (கற்சேனை) அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிர்வாகத்தின் 17 ஆம் குறிச்சிக் கிராம நிலதாரி பிரிவுக்குட்பட்டதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இக்கிராமத்தின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் அயராத அர்ப்பணிப்புக்களுடன் பங்காற்றிய கடின உழைப்பாளிகளுள் ஒருவரும் அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்றை வதிவிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் கிதுறு முகம்மத்தின் மகத்தான தியாகப் பணியினை எவராலும் மறத்தலாகாது. அத்துடன் இங்கு ஐந்து குடும்பங்களுக்குத் தனது சொந்தக் காணியிலிருந்து நன்கொடையாகக் காணி வழங்கி வைத்த செயற்பாட்டையும் இப் பதிவில் நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.

குடிபெயர்ந்து கஷ்டங்களுக்கு மத்தியில் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அன்றாட கூலித் தொழில் செய்து வரும் மக்களுக்குப் பல உதவிகள் தேவையுடையனவாக இருப்பதைக் காணக்கூடியதாகவிருந்தது. மற்றும் பள்ளிவாசலுக்குப் பல குறைபாடுகள் இருப்பதனால் உதவக் கூடிய தனவந்தர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கி வைக்கலாம். 

சம்புநகர், ஆலம்குளம் மார்க்கத்தில் 35 ஆம் வாய்க்கால் போன்ற இடங்களைக் கடந்து வரும் பிரதான சந்தியின் வடக்குப் பக்கமாகத் தீகவாப்பிக் கிராமத்திற்குச் செல்லும் பாதையில் ரஹ்மத் நகர் (கற்சேனை) பசுமையான வயல் வெளிகளுடன் ரம்மியமான சூழலில் அழகுறக் காட்சியளிக்கின்றதனை அவதானிக்க முடியும்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி ரமழான் முஹம்மது அஷ்கர் (சித்தீகி) என்பவரால் அண்மையில் நடாத்தப்பட்ட குத்பாப் பிரசங்கம், ஜும்ஆத் தொழுகையில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டர்.

மர்ஹூம்களான முஹம்மது அலியார், சுல்தான் வட்டானை போன்றோரின் அரிய சேவைதனை நினைவு கூர்வதோடு சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற அஹமட்லெப்பை நெய்னா முஹம்மத் வட்டானையின் கடந்த கால சேவையினையும் நினைவு கூர்ந்தவனாக இந்த ரஹ்மத் நகரில் பறக்கத்தும், ரஹ்மத்தும் இறங்கி மஸ்ஜிதுர் ரஹ்மா இறை இல்லம் பக்கம் அடியார்களின் நெருக்கம் மேலும் தொடர வேண்டுமென இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.




கற்சேனை வயல் (ரஹ்மத் நகர்) குடியிருப்பும், மஸ்ஜிதுர் ரஹ்மா இறை இல்லமும் கற்சேனை வயல் (ரஹ்மத் நகர்) குடியிருப்பும், மஸ்ஜிதுர் ரஹ்மா இறை இல்லமும் Reviewed by Editor on September 04, 2022 Rating: 5