ஆபத்தான நிலையில் பிரசவமாகின்ற சிசுக்களை காப்பாற்றுவதற்கான பயிற்சி

(றியாஸ் ஆதம்)

வைத்தியசாலைகளில் இடம்பெறுகின்ற பிரசவங்களின் போது ஆபத்தான நிலையில் பிறக்கின்ற குழந்தைகளைக்காக்கும் பொருட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றது.

குறிப்பாக பிரசவங்களின் போது ஆபத்தான நிலையில் பிறக்கின்ற குழந்தைகளை பராமரித்து சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் பொத்துவில் மற்றும் திருக்கோவில் வைத்தியசாலைகளில் இல்லாமையினால் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்குழந்தைகள் தூரப்பிரதேச வைத்தியசாலைகளுக்கே கொண்டு செல்லப்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு, எதிர்வரும் காலங்களில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளிலும் சிசுக்களுக்கான சிகிச்சை பராமரிப்பு பிரிவுகள் திறந்து வைக்கப்படவுள்ளன. இதனையிட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் குடும்ப சுகாதார பணியகத்தின் ஊடாக பல்வேறு பயிற்சி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்தியத்தின் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் மாதமொன்றுக்கு 70 தொடக்கம் 80 வரையான பிரசவங்கள் இடம்பெறுகின்றன. வருடமொன்றிற்கு 750 தொடக்கம் 800 வரையான பிரசவங்கள் அங்கு பதிவாகின்றன. பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சில வருடங்களாக அதிகமான பிரசவங்கள் இடம்பெறுவதனால் குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சியளிக்கப்பட்டது.

குறித்த பயிற்சி செயலமர்வு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ரீஆர். றஜாப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் சித்ரா வாமதேவன் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பினின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டொக்டர் கே.கமலதீபன், யாழ்.போதனா வைத்தியசாலையின் சிசுநல வைத்திய நிபுணர் டொக்டர் எம்.நிப்ராஸ், சிறுபிள்ளை வைத்திய நிபுணர்களான டொக்டர் இன்பாக் லுதுபுடீன், டொக்டர் எஸ்.எம்.அசார், டொக்டர் எஸ்.என்.றொசான்ந் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.






ஆபத்தான நிலையில் பிரசவமாகின்ற சிசுக்களை காப்பாற்றுவதற்கான பயிற்சி ஆபத்தான நிலையில் பிரசவமாகின்ற சிசுக்களை காப்பாற்றுவதற்கான பயிற்சி Reviewed by Editor on November 22, 2022 Rating: 5