அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை விடுதி திறந்து வைப்பு

(சியாத்.எம்.இஸ்மாயில்)     

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வரலாற்றில் முதற் தடவையாக இருதய  நோய் சிகிச்சை விடுதி புதன்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் ஊழியர்கள், வைத்தியசாலை குழு இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வுக்குப் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், வைத்தியசாலையின் ஸ்தாபகருமான  ஏ.எல்.எம். அதாஉல்லா  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ் விடுதியினை திறந்துவைத்தார். 

வைத்தியசாலை குழு தலைவர் டாக்டர். எம்.ஏ.றக்கீஸ்து  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஜி. போல் றொஷான், அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசிக், கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.றிபாஸ்,  அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஸார், இருதய நோய் வைத்திய நிபுணர் எம். ஏ. நௌஷாட் அலி மற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியசாலை குழு உறுப்பினர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியினால் வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டியும், தனவந்தர்களால் வைத்திய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இருதய நோய், மாரடைப்பு மற்றும் உயர் குருதியமுக்கம் மக்களிடையே அதிகளவாக காணப்படுவதுடன் இதன் காரணமாக இளவயது மரணங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், இருதய நோய் சிகிச்சை விடுதி திறந்து வைப்பு கிழக்குக் கரையோரப் பிராந்திய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகவுள்ளதுடன் முறையான சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படவுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஜி. போல் றொஷான் குறிப்பிட்டார்.















அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை விடுதி திறந்து வைப்பு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை விடுதி திறந்து வைப்பு Reviewed by Editor on November 02, 2022 Rating: 5