(றிஸ்வான் சாலிஹு)
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் கடந்த 2019 மற்றும் 2021 ஆண்டுகளில் நாடளாவிய ரீதியில் உள்ள கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட "பிரதீபா சங்கீத, நடன" போட்டிகளில் கலந்து கொண்டு தேசிய ரீதியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை (15) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கொழும்பு எல்பிஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மத்திய நிலையம் 2019 ஆம் ஆண்டுக்காக, முஸ்லிம் கிராமிய நடனம் குழு - றபான், புதிய படைப்பாக்க பாடல் குழு, கிராமிய பாடல் குழு - சிரேஷ்டம், கிராமிய பாடல் குழு - கனிஷ்டம் ஆகிய போட்டிகளில் நான்கு முதலிடத்துக்கான தேசிய விருதுகளையும், 2021 ஆம் ஆண்டுக்காக முஸ்லிம் கிராமிய நடனம் - றபான் மற்றும் பொல்லடி நிகழ்ச்சியில் ஒரு முதலிடத்துக்கான தேசிய விருதினையும் பெற்று மொத்தமாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மத்திய நிலையம் 2019/2021 ஆம் ஆண்டுகளுக்காக 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்கள்.
தேசிய ரீதியில் சாதனை படைக்க அயாராது பாடுபட்ட அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல். றிஸ்வான் அவர்களுக்கும், பயிற்சிகளை வழங்கிய வளவாளர்களுக்கும் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
