பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடாத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு விளையாட்டு திருவிழா எனலாம்.
22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி இம்முறை கத்தாரில் இம்மாதம் 20ஆம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகிறது.
இக்கால்பந்த தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.
அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஆரம்ப நாளில் (20) நடைபெறும் ஆரம்ப போட்டியில் கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.
இத்தொடரில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு இந்திய நாணயப்படி ரூ.342 கோடி பரிசாகவும், 2ஆவது இடத்துக்கு ரூ.244 கோடியும், 3ஆவுவது இடத்துக்கு ரூ.219 கோடியும், 4ஆவது இடத்துக்கு ரூ.203 கோடியும்,கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடியும், 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
