நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள விதாதா நிலையங்களை தொழில்நுட்ப அமைச்சின் கீழ் எடுத்து மீண்டும் அதனை வினைத்திறனான முறையில் இயங்கச் செய்வதற்கான பிரேரணையை முன்வைத்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அண்மையில் (30) தெரிவித்தார்.
விதாதா நிலையங்களை மீண்டும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டு வந்து தற்போதைய உலகத்துக்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீரசுமண வீரசிங்க விடுத்த வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் தொடர்பிலும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். கடந்த வருடத்தில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பெற்ற இலாபம் 12 பில்லியன் ரூபா என்றும், இந்த வருடத்தில் ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையில் 6 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த இலாபத்தைக் குறித்த நிறுவனம் ஈட்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி, குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் நிறுவனம் குறித்த தகவல்களைக் கேட்டறிந்தபோதே இந்தத் தகவல் வெளியானது.
டெலிகொம் நிறுவனத்தின் 49.5 சதவீத பங்கு அரசுக்கு சொந்தமானது என்றும், தனியார் மயமாக்கப்பட்டால், அந்தப் பங்குகளே தனியாருக்குச் சொந்தமாகும் என்றும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைய சேவை நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவினால் 5ஜி தொழில்நுட்பத்திற்கு அனுமதி வழங்கப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய அடுத்த வருடம் 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை தொடங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.எம்.எம்.முஷாரப், கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி, கௌரவ குணதிலக ராஜபக்ஷ மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
