இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் 20 முன்பள்ளிப் பாலர் பாடசாலைகள் இயங்கிவருகின்றன. அப் பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரினை வழங்கி ஆரோக்கியமான, சுகாதாரமான மாணவ சமூகத்தை உருவாக்கும் கருத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 12 பாடசாலைகளுக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் "யுனிசெப்" நிறுவனத்தின் அனுசரணையில் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்கள் உட்பட கணக்காளர் திருமதி றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர், ஏ.சி.எம். தஸ்லீம் நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜமீல், கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் எச்.பி. யசரட்ன பண்டார உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். முஹம்மட் இம்டாட் அவர்களின் ஏற்பாட்டில் இந்நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட நாட்களாக தேவைப்பட்டிருந்த சுத்தமான நீர் பிரச்சினைகளுக்கு தீர்வாக நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
