அனர்த்தங்களை எதிர்கொள்வதோடு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் - அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி வட்டாரத்தில் இன்று (08) இரவு வீசிய பெரும் காற்றினால் வயது முதிர்ந்த பிரம்மாண்டமானதொரு தென்னை மரம் முறிந்து விழுந்ததனால் பக்கத்தில் இருந்த வீடொன்று சேதமாக்கப்பட்டதோடு வீதித் தடையும் ஏற்பட்டு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

அத்தோடு, அப்பகுதி மின்சார கம்பிகளும் அறுந்து விழுந்து மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் இது தொடர்பாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரிவிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவர் ஊடாக தவிசாளருக்கு கிடைத்த தொலைபேசித்  தகவலின் அடிப்படையில் அதிகாலை நேரம் வித்தியாசமான காலநிலை சூழலுக்கு மத்தியிலும் பிரதேச சபையினுடைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் முறிந்து விழுந்த மரம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு மின்சார இணைப்பும் வழங்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் றாசீக்,

எவ்வகையான அனர்த்தமாக இருந்தாலும் இறைவனின் உதவியுடன்  அக்கரைப்பற்று பிரதேச சபையினுடைய உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கால நேரம் பாராமல் களம் இறங்கி மக்களின் துன்பங்களை துடைப்பதற்கு முழு மூச்சாக எம்மோடு நின்று ஒத்துழைப்பு வழங்கி மக்களுக்காக பணி  செய்வதென்பது மனதிற்கு பெருமையாக இருப்பதோடு, அனர்த்தங்களை எதிர்கொள்வதோடு சகலரும் மிகவும் அவதானமாகவும் தற்காப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அனர்த்தங்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் பிரதேச சபை தவிசாளர் றாசீக் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் பங்கெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






அனர்த்தங்களை எதிர்கொள்வதோடு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் - அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அனர்த்தங்களை எதிர்கொள்வதோடு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் - அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் Reviewed by Editor on December 08, 2022 Rating: 5