(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு அன்பளிப்புச் செய்யும் நோக்கிலும், இவ்வைத்தியசாலையில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமுகமாகவும் அக்கரைப்பற்று தக்வா ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான மாபெரும் இரத்ததான முகாம், பள்ளிவாசலின் தலைவர் எம்.எம்.றியாத் அவர்களின் தலைமையில் பள்ளிவாசல் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
இம்மாபெரும் இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வில், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் விபுல சந்தரசிறி அவர்களும், மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபீழ் என்.எம்.அப்துல்லாஹ், அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் அஷ்ஷேக் றாசீத் யஹ்யா, பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் அஷ்ஷேக் ஜே.எம்.சியாப் (ஸலபி) உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பாதுகாப்பு படையின் உயரதிகாரிகள், மும்மதங்களின் தலைவர்கள், உலமாக்கள், வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் நிர்வாக சபை பிரதிநிதிகள், சமூக சேவை அமைப்புக்களின் உறுப்பினர்கள், தொண்டர் அமைப்புக்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் இரத்த நன்கொடையாளர்கள் உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டார்கள்.
இப்பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் உறுப்பினர்களின் அயராத பெரும் முயற்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்தான முகாமில் நுாற்றுக்கணக்கான ஆண் பெண்கள் உட்பட இஸ்லாமிய மார்க்க கல்வி பயிலும் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உதிரங்களை தானமாக வழங்கி இந்நிகழ்வின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்கள்.
இப்பள்ளிவாசலானது மத சார்பான நிகழ்வுகளுக்கு அப்பால், சமூக சேவை விடயங்களான இரத்தானம் வழங்கல், சிரமதான நிகழ்வில் பங்குகொள்ளல் உட்பட வசதி குறைந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கான அத்தியவசிய உபகரணங்கள் வழங்கல், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் இன நல்லினக்கத்தை கட்டியெழுப்பும் வகையிலான மும்மதங்களையும் சேர்ந்தவர்களுக்கான பொருளாதார உதவிகளையும் இப்பள்ளிவாசல் செய்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 
        Reviewed by Editor
        on 
        
February 19, 2023
 
        Rating: 
 












