கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை!

(றியாஸ் இஸ்மாயில்)

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகில கனகசூரியம் கூறியதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நீண்ட காலமாக காணப்படுகின்ற ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகில கனகசூரியத்தினை மாகாணக் கல்வித் திணைக்களத்தில் (30) சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியபோது குறித்த விடயத்தினை மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாக அப்பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் தற்போது 74 ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களின் வெற்றிடம் நீண்ட காலமாக காணப்படுகின்றது. இவ்வலயத்திலுள்ள அட்டாளைச்சேனை கல்விக்கோட்டம் மற்றும் பொத்துவில் கல்விக்கோட்ட கஷ்ட, அதிகஷ்டப்  பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களின் பற்றாக்குறை  அதிகமாக உள்ளது.

இது இவ்வாறு இருக்கதக்க நிலையில், வெளிமாகாணங்களில் 5 வருடங்கள் கடமை புரிந்து குறிப்பிட்ட மாகாணத்தில் விடுவிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களை கிழக்கு மாகாண சபை ஏற்க முடியாது என அறிவிக்கப்பட்ட விடயத்தில் நான் மனவேதனையுடன் கவலை அடைந்தேன். இதன் காரணமாக கிழக்கு மாகாணப் பாடசாலைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலைமை உருவாகி வருகின்றது.

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஆரம்பப்பிரிவு ஆசிரியர் ஒருவர் வடமத்திய மாகாண பாடசாலையில் 5 வருடங்கள் கடமை புரிந்து குறித்த மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆரம்பப்பிரிவு ஆசிரியரை கிழக்கு மாகாண சபை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாகவும், குறித்த ஆசிரியரை பாரம் எடுக்க முடியாது என அறிவித்துள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகில கனகசூரியவிடம் குறிப்பிட்ட விடயத்தினை முன்வைத்தபோது, கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்ததாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.



கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை! கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை! Reviewed by Editor on March 31, 2023 Rating: 5