ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (14) திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலே இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்-
சஜித் பிரேமதாசா வெற்றிபெற்றால் கிழக்கில் முஸ்லிம்களின் அதிகாரம் மேலோங்கும் என்பதற்காகவே, பெரமுனவை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன். மேலும் கிழக்கு தமிழர்களின் நலன் சார்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழர்களின் அரசியல் நலன்களில் நாம் உறுதியாக இருக்கிறோம். அது உடனடியாக சாத்தியப்படுமா என்ற கேள்வியுள்ளது. அது சாத்தியப்படுவதற்குரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அது சாத்தியப்படுவதற்குள் கிழக்கின் தமிழர்களின் இருப்பு நீடிக்குமா என்ற கேள்வியுள்ளது.
கிறிஸ்மஸிற்கு தீர்வு வரும், தீபாவளிக்கு தீர்வு வரும், நத்தாரிற்கு தீர்வு வரும் என்றபடியுள்ளனர். கிறிஸ்மஸூம் நத்தாரும் வேறுவெறா என்ற குழப்பம் எனக்கே ஏற்பட்டு விட்டது.
தீர்வு வரும்போது, கிழக்கில் தமிழர்களின் இருப்பு எப்படியிருக்குமென்பது எல்லோருக்கும் தெரியும். கிழக்கு தமிழர்களின் நிலத்தை, வளத்தை, கல்வியை, இருப்பை வலுப்படுத்த வேண்டும். நான் தமிழ் அரசியல்வாதிகளிற்கு சவால் விடுகிறேன். கிழக்கு தமிழர்களிடமிருந்து பறிபோகிறதென கூறும் அரசியல்வாதிகளிடம் என்ன திட்டம் உள்ளது?
2015இல் இருந்து மட்டக்களப்பில் அதிக போராட்டங்களை செய்தது வியாழேந்திரனும், முற்போக்கு தமிழர் அமைப்புமே.
மட்டக்களப்பில் 75 வீதமான தமிழர்கள் இருந்தாலும், 25 வீத முஸ்லிம்களை மையப்படுத்தியே 4 அபிவிருத்தி குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கலடி, கிரான் போன்ற பகுதிகளில் தமிழ் மக்களின் பிரதிநிதியான நான் நீக்கப்பட்டுள்ளளேன்.
கிழக்கு மக்களின் இருப்பை தக்க வைக்க எந்த வேட்பாளரை ஆதரிப்பதென்று பார்க்க வேண்டும். இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறார்கள். ஒருவேளை சஜித் வெற்றிபெற்றால், இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவார்கள். எமது கருத்துக்கள் செவிமடுக்கப்படாது.
மஹிந்த ராஜபக்ச தரப்புடன் 12 அம்ச கோரிக்கையை முன்வைத்து பேச்சை நடத்தினோம். இதனடிப்படையில் பெரமுனவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளொம்“ என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வியாழேந்திரன் எம்.பி
Reviewed by Editor
on
October 14, 2019
Rating:
Reviewed by Editor
on
October 14, 2019
Rating:
