உலகின் புதிய அறிவு நாட்டின் கல்வித் திட்டத்திற்கு உடனடியாக உள்வாங்கப்பட வேண்டும்- ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு


(க.ஷியா)

இம்மாதம் 14ஆம் திகதி பத்தரமுல்லை வோடர்ஸ் ஏஜ் நிலையத்தில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கையை வெளியிடும் வைபவத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க இயக்கத்தின் கல்வி கொள்கையை வெளியிட்டு உரையாற்றினார்.

மேலும் அவர் தனது உரையில்-

இன்று இலங்கையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களில் சுமார் 70% வீதமானவர்கள் க.பொ.த. சாதாரண தரம் சித்தி பெறாதவர்கள். சிறைக் கைதிகளில் சுமார் 60% வீதமானவர்கள் க.பொ.த. சாதாரண தரம் சித்தி பெறாதவர்கள். ஆகவே கல்விக்கும் சமூகக் குற்றச் செயல்களுக்கும் இடையில் தொடர்பிருக்கின்றது.

அதுபோல குடும்ப வருமானத்துக்கும் கல்விக்கும் தொடர்பிருக்கின்றது. வறுமையின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை நோக்கினால் அவர்கள் கல்வியிலும் கீழ் மட்டத்தில் தான் இருக்கின்றார்கள். ஆகவே நாடு என்ற வகையில் நாம் முகம் கொடுத்துள்ள பொருளாதார சமூகப் பிரச்சினைகளில் இருந்து வெளியேறுவதற்கு பயன்படுத்தக் கூடிய பிரதான வழி தான் கல்வி.

இலங்கையின் அபிவிருத்தியிலும், சமூகத்தை நலன்மிக்கதாக்கும் போராட்டத்திலும், கிராமிய வறுமையை ஒழிக்கும் போராட்டத்திலும் முக்கியமான இடம் கல்விக்குக் கிடைக்கின்றது. ஆகவே கல்விக் கொள்கையை அந்த முக்கியத்துவத்தோடு தான் நாங்கள் கவனத்திற்கொள்கின்றோம்.

இன்று எமது நாட்டில் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள சிக்கலை, சிறிய அளவிலான மறுசீரமைப்புக்களினால் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஆகவே இன்றிருக்கின்ற கல்வியின் பிரச்சினைக்கு விரிவான சரியான செயல்திட்டமொன்று தேவைப்படுகின்றது. தற்போது இருக்கின்ற நிறுவனக் கட்டமைப்பு, கல்வியின் வடிவம், பாடங்கள் உட்பட அனைத்தையும் மீளாய்வு செய்கின்ற, புதிய கல்விச் செயல்திட்டமொன்று தேவைப்படுகின்றது.

இன்று முன்வைக்கும் கல்விச் செயல்திட்டமானது, முன்கூறிய பரந்த நோக்கங்களுடன் தயாரிக்கப்பட்ட செயல்திட்டமாகும். இந்தக் கல்விக் கொள்கையில் இன்னும் பல நோக்கங்கள் உள்ளன. இன்று எமது நாட்டில் கல்வி பாடசாலைகளில் இல்லை. வெளியே இருக்கின்றது. பிள்ளைகள் பழக்கத்துக்குப் பாடசாலைக்குச் செல்கின்றார்கள், படிப்பதற்கு வெளியே செல்கின்றார்கள். அதனால் கல்வியை மீண்டும் பாடசாலைக்குள் எடுத்து வரும் பாரிய சவாலொன்று இருக்கின்றது. அதேநேரம் வெளியே உருவாகியுள்ள கல்வியும் கூட கையிலுள்ள பணத்துக்கு ஏற்ப கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றது. அது, கையிலிருக்கின்ற பணத்தின் அளவுக்கு கொள்வனவு செய்யும் தொலைக்காட்சியின் அளவைத் தீர்மானிப்பது போன்றது. அவ்வாறு வெளியே விற்பனையாகும் கல்வியை மீண்டும் பாடசாலைக்குள் எடுத்து வருவது இந்த செயல்திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.

இன்று முதலாம் வகுப்புக்கு சுமார் 330,000 புதிய மாணவர்கள் நுழைகின்றார்கள். இந்த 330,000 மாணவர்களில் சுமார் 38,000 மாணவர்கள் (12%) க.பொ.த. சாதாரண தரம் எழுதுவதற்கு முன்னர், பாடசாலையை விட்டு இடைவிலகிச் செல்கின்றனர். க.பொ.த. சா/த பரீட்சையைத் தொடர்ந்து க.பொ.த. உ/த பரீட்சைகளில் இன்னும் பெருந்தொகையினர் கல்வியை விட்டுவிட்டு செல்கின்றார்கள். முதலாம் வகுப்பில் நுழைந்த 330,000 மாணவர்களில் சுமார் 28,000 வரை தான் உயர் கல்விக்காக செல்கின்றனர்.

ஆகவே கல்விக்காக பாடசாலைக்குள் நுழையும் பிள்ளைகளில் 28% வீதமாவது பட்டதாரிகளாக்குவது, அடுத்த நோக்கமாகும். மீதமிருக்கின்ற மாணவர்களை தொழில் நிபுணத்துவம் மிக்க டிப்ளோமாதாரிகளாக்க வேண்டும். கல்விக்காக பாடசாலைக்குள் நுழையும் எந்தவொரு பிள்ளையும், இடைவிலகல் இல்லாமல், அடிப்படைக் கல்விப் பயணத்தின் இறுதிவரை பயணிப்பவர்களாக மாற்ற வேண்டும். இந்த செயல்திட்டம் அந்த நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

இன்று இலங்கையில் கல்விக்காக செய்யப்படும் செலவில் பெரும்பங்கை பெற்றோர்தான் சுமக்கின்றார்கள். வீட்டில் கல்வி பயிலும் பிள்ளையொன்று இருந்துவிட்டால் அது குடும்பத்துக்கே சுமையாகி விட்டது. ஆகவே பிள்ளைகளின் கல்விச் சுமையை குடும்பத்திடம் சாட்டிவிடாமல் அந்தச் சுமையை அரசாங்கம் பொறுப்பேற்பது எமது கல்விக் கொள்கையின் இன்னுமொரு நோக்கமாகும். இந்த அனைத்து நோக்கங்களுடன் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

1. ஆரம்பப் பிள்ளைப் பருவம் (முன்பள்ளிப் பாடசாலை)-

ஆரம்பப் பிள்ளைப் பருவம் குறித்து மிகவும் குறைந்த கவனம் செலுத்தப்படுகின்றது. முன்பள்ளிப் பாடசாலை என்பது சுய தொழிலாக மாறிவிட்டது. கற்பித்தல் துறையில் சிறப்புத் தேர்ச்சியும், உயர் நிபுணத்துவமும் கொண்டவர்களைத்தான் ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்விக்காக ஈடுபடுத்த வேண்டும். ஏன் அவ்வாறு கூறுகின்றோம்? குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு அவர்களை ஆரம்பத்தில் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது. ஆகவே தற்போது சிதறி ஒழுங்கீன நிலையில் இருக்கின்ற ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வி நிறுவனங்களை முறைமைப்படுத்தி நிறுவனமயப்படுத்தப்பட்டு அதனை முழுமையாக அரசாங்கத்தின் பணியாக மாற்ற வேண்டும்.

2. அரசாங்கப் பாடசாலைகள்:

பாடசாலைகள், அடுத்து நாங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டிய முக்கியமானதொரு பகுதியாகும். இன்று பாடசாலைகளுக்கிடையில் பாரிய முரண்பாடு தோன்றியுள்ளது. இன்று மிக அதிகமான கேள்வி உள்ள பாடசாலைகள் 36 மட்டுமே உள்ளன. அந்த 36 பாடசாலைகளுக்கு கிடைக்கும் விண்ணப்பங்கள், ஓர் இலட்சத்தை (100,000) விட அதிகம். சராசரியாக, வருடாந்தம் முதலாம் வகுப்புக்கு நுழைவுபெறும் 300,000 பேர்களில் 100,000 பேர் விண்ணக்கும் பாடசாலைகள் 36.

இலங்கையில் உள்ள மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை பத்தாரியத்து அறுபத்தி இரண்டு (10,062). விண்ணப்பிக்கின்ற 100,000 பேரில் அந்த 36 பாடசாலைகளும் சுற்று நிருபத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிள்ளைகளின் எண்ணிக்கை 8,000. எனவே, இந்தப் பிரச்சினையை சுற்று நிருபத்தினால் தீர்த்துக்கொள்ள முடியாது. இந்தப் பிரச்சினை பாடசாலைகளுக்கு இடையிலான முரண்பாட்டினால் தோற்றம் பெற்றது.

2016 ஆம் ஆண்டின் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களைத் தருகின்றேன், முதலாம் வகுப்புக்கு ஒரு பிள்ளை கூட நுழையாத பாடசாலைகள் 433. ஒரு பிள்ளை மாத்திரம் நுழைந்த பாடசாலைகள் 137, இரண்டு பிள்ளைகள் மாத்திரம் நுழைந்த பாடசாலைகள் 138. ஜந்து பிள்ளைகளை விட குறைவாக நுழைந்த பாடசாலைகள் 1,845. ஒருபுறம் பாடசாலைகளின் நிலை இவ்வாறு இருக்கும்போது 36 பாடசாலைகளுக்கு 100,000 விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது. இந்த முரண்பாட்டுக்கு நாம் தீர்வொன்றைத் தேடிக்கொள்ள வேண்டும்.

அதுபோல, ஒரேயொரு ஆசிரியர் இருக்கும் பாடசாலைகள் 54. இரண்டு ஆசிரியர்களைக்கொண்ட பாடசாலைகள் 97. பத்து ஆசிரியர்களை விடக் குறைவான பாடசாலைகள் 3,349 இருக்கின்றன. பாடசாலையின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 50 ஐ விடக் குறைவான பாடசாலைகள் 1,486 உம், 30 மாணவர்களை விடக் குறைவான பாடசாலைகள் 510 உம், பதினைந்து மாணவர்களை விடக் குறைவானவை 262 உம் உள்ளன. இந்த பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் என்ன? இல்லங்களுக்கிடையிலான போட்டியாவது நடத்த முடியுமா? அந்தப் பிள்ளைகள் பிள்ளைகள் இல்லையா?

அந்தப் பிள்ளைகளின் பெற்றோருக்கும் ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. உலகில் வேறு எந்த பெற்றோரையும் விட, தமது பிள்ளைகளுக்குக் கல்வியூட்டுவதற்காக அரும்பாடுபடும் பெற்றார்கள் இலங்கையில் தான் இருக்கின்றார்கள். தம் பிள்ளைக்கு கல்வியை வழங்கிவிட்டால் தமக்குக் கிடைத்ததை விட சிறந்த வாழ்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா பெற்றாரிடமும் இருக்கின்றது.

குழந்தை கருவுற்ற நாள் முதல் பிள்ளையின் கல்வியை திட்டமிட ஆரம்பிக்கின்றார்கள். வதிவிடம், மின்சார பில், தொலைபேசி பில் போன்றவற்றை மாற்றிக்கொள்வது மட்டுமல்ல பிறக்கின்ற திகதியைக் கூட பாடசாலை நுழைவைக் கருத்திற்கொண்டு தீர்மானிக்கின்றார்கள். இன்று இலங்கையில் அதிகமான பிள்ளைகள் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடையில் பிறக்கின்றன. உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு பெற்றோரும் கல்விக்காக இவ்வாறான செயல்களை செய்வதில்லை. அந்தளவு சிரமப்பட்டாலும் முதலாம் வகுப்பில் நுழையும் 330,000 மாணவர்களில் பல்கலைக் கழகத்துக்கு நுழைவைப் பெறுவது 28,000 மட்டும்தான். கல்விக்காக இந்தளவு சிரமங்களை மேற்கொள்ளும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை, இன்று வரை ஆட்சிசெய்த அரசாங்கள் நிறைவேற்றவுமில்லை, வெற்றிபெறவுமில்லை.

3. மாணவர்களின் நலன்கள்-

இன்னொரு பக்கம், பிள்ளைகள் கல்விக்காக அனுபவிக்கும் கஷ்டங்களும் சிரமங்களும். கல்கமுவயில் இருந்து குருநாகல் பாடசாலைக்கு வருகின்றார்கள். மின்னேரியாவில் இருந்து கண்டி பாடசாலைக்குச் செல்கின்றார்கள். அதிகாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறி இரவு பத்து மணிக்கு வீடு திரும்புகின்றார்கள். இதன் காரணமாக அதிகமான பிள்ளைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.

சராசரியாக ஆயிரம் மாணவர்களில் ஐம்பது பேராவது மாதாந்தம் மனநல வைத்தியரிடம் செல்கின்றார்கள். மனநல வைத்திய முகாம்களில் கலந்துகொள்கின்றார்கள். பிள்ளைகளின் பிள்ளைப் பருவம் இல்லாமல் போய்விட்டது. சமூக உறவு இல்லாமல் போயுள்ளது. ஒரு நாவலை, கவிதையை வாசிப்பதற்கு நேரம் இல்லை. அதிகாலையில் வாகனத்தில் ஏற்றப்படுகின்ற பிள்ளைகள் இரவில் மீண்டும் வெளியே எடுக்கப்படுகின்றார்கள். என்ன இந்த கல்வி முறை? இன்றைய கல்வி முறையினால், மனிதன் என்ற சமூகப் பிராணி உருவாக மாட்டான்.

4. ஆசிரியர் தொழிலின் கௌரவம்-

ஆசிரியர்த் தொழிலை, இலங்கையின் கௌரவமான பத்து தொழில்களில் ஒன்றாக உயர்த்துவது தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கையின் இன்னுமொரு நோக்கமாகும்.

ஆசிரியர்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சுமார் 30 வருடங்கள் ஆசிரியர் தொழிலில் ஈடுபடும் ஒருவருக்கு உலகின் புதிய அறிவைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் இல்லை.

ஆகவே பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய அறிவு கிடைக்கின்ற வழிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையாவது, அவ்வாறான கல்வி வாய்ப்புக்கள் ஆசிரியர்களுக்காக உருவாக்க வேண்டும்.

மறுதலையாக ஆசிரியர்களின் சம்பளம், மிகவும் குறைந்த அளவு சம்பளம் கிடைக்கின்றது. அதற்கு மாற்றாக ஆசிரியர் தொழிலை இலங்கையின் கௌரமான பத்து தொழில்கள் ஒன்றாக உயர்த்த வேண்டும்.

எனவே உலகில் மிக வேகமாக வளரும் புதிய அறிவை எமது கல்விக்கு உள்வாங்குவது எப்படி என்பதும், அந்தப் புதிய அறிவுக்கு ஏற்ப இலங்கையின் கல்வியைத் தொடராக நவீனமயப்படுத்துவது எவ்வாறு என்பதும் இந்தச் செயல்திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கவனத்தில்கொண்டு, எமது நாட்டின் மனித வளத்தை, தேசத்தின் அபிவிருத்திக்காக மிகவும் வெற்றிகரமாக பயன்படுத்தக் கூடிய வளமாக உருவாக்கும் நோக்கத்துடன், கல்வி குறித்து மீளாய்வுகளுடன் இந்தக் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகின் புதிய அறிவு நாட்டின் கல்வித் திட்டத்திற்கு உடனடியாக உள்வாங்கப்பட வேண்டும்- ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு உலகின் புதிய அறிவு நாட்டின் கல்வித் திட்டத்திற்கு உடனடியாக உள்வாங்கப்பட வேண்டும்- ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு Reviewed by Editor on October 29, 2019 Rating: 5