(பாறுக் ஷிஹான்)
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் எமது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொது மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை தமிழர் சுதந்திர ஐக்கிய முன்னணியின் பெரியநீலாவணை இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நா.மிதுலன் தலைமையில் இடம்பெற்ற மக்களுடன் மாபெரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய அவர்,
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும். ஜனாதிபதியை விரைவில் மீண்டும் சந்திப்பதாகவும், புதிதாக உருவாக்கப்படவுள்ள கல்முனை மத்தி கல்வி வலயம் தொடர்பாக நாம் இந்த அரசாங்கத்தில் கேட்டு செய்துமுடிப்போம். எமக்கு பல நல்ல விடயங்களை செய்யக்கூடிய இந்த அரசாங்கத்திடம் இருந்து எமது தேவைகள் குறைகளை நிவர்த்தி செய்ய முடிந்தவரை பாடுபடுவேன்.
அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுசு புதுசாக ஏதோ கதைத்து மக்களை குழப்பி வருகின்றனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரனுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கல்முனை பிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்ய நான் இனி விடமாட்டேன். புதிய தலைமுறையை உருவாக்க அம்பாறையில் நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.
பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் இனியாவது எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். காற்று போன சைக்கிளில் சென்ற உங்களுக்கு எம்மால் ஒரு போதும் மக்களால் ஏமாற்ற முடியாது என தெரிவித்தார்.
இதில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர், கொள்கை பரப்பு செயலாளர், முன்னாள் போராளிகள் மற்றும் மக்கள் நலன் பேணல் பொறுப்பாளர் வரதா அவர்களுடன், பெரியநீலாவணை மஹாவிஷ்ணு ஆலய பிரதம குரு நிரோஜசர்மா, மற்றும் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளான ஜெகநாதன், வரதராஜன் ஆகியோரும் பெருமளவான இளைஞர்களும், பொதுமக்களும் பங்குபற்றியிருந்தனர்.
கலந்துரையாடலை தொடர்ந்து பெரியநீலாவணை தமிழ் பிரிவுக்கானதும் பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மைதானத்திற்குமான காணி தனியாரால் சுவிகரிக்கப்படுவது தொடர்பாக தெரிவிக்கப்ட்டதையடுத்து குறித்த காணியையும் சென்று பார்வையிட்டதுடன், பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களையும் நேரில் சென்று சந்தித்து குறைகள், தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
கல்முனை பிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்ய நான் இனி விட மாட்டேன் என்கின்றார்!!! கருணா அம்மான்
Reviewed by Editor
on
December 31, 2019
Rating:
