சாய்ந்தமருதுக்கு அரசியல்வாதிகளால் இழைக்கப்படும் அநீதிகளை பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல


(எஸ்.அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது பிரதேச மக்கள் பல்வேறு விடயங்களில்
ஏமாற்றப்பட்டும் அடக்கி ஒடுக்கப்பட்டும் அடிமைகளாக நடத்தப்பட்டும் வருகின்றார்கள் இதனை முறியடிப்பதற்காகவே இன்று நாம் தேர்தலில் குதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளரும் பொருளாதார உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
இவ்வருடம் 2020 ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் பொதுத் தேர்தலில் களமிறங்க சாய்ந்தமருது பள்ளி வாயல் நிர்வாகத் தினரால் அறிவிக்கப்பட்டுள்ள ஏ.எல்.எம்.சலீம் பிரதம பங்கேற்பாளராக கலந்து கொண்ட கருத்தரங்கு நேற்று (25) மாலை 8.30 மணிக்கு சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதியில் ஆசிரியர் ஏ.ஜே.எம். அமான் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய சலீம் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது,
சாய்ந்தமருதுக்கு இப்பிரதேசத்திற்கு அரசியல்வாதிகளால் இழைக்கப்படும் அநீதிகளை நான் சாய்ந்தமருது மண்ணின் மைந்தன் என்ற வகையில் பார்த்துக்கொண்டு பொறுத்துக் கொண்டிருக்க முடியாது இதனை பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல. எனவே தான் இவர்களது ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நாங்கள் இன்று களத்தில் இறங்கி இருக்கின்றோம்.
பல்வேறுபட்ட வழிகளிலும் செயற்பாடுகளிலும் சாய்ந்தமருது பிரதேசம் ஏமாற்றப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் நாம் இந்த தேர்தலில் நமக்கான உரிமையை வென்றெடுப்பதற்காக, சாய்ந்தமருது பிரதேச சபையை வென்றெடுப்பதற்காக ஒற்றுமையாக இணைந்து மக்களின் நலனுக்காக நாம் ஒற்றுமைப்பட்டிருக்கின்றோம்.
இதனூடாக சாய்ந்தமருதுக்கான தாகம் தீர்க்கப்படும். அத்துடன் சாய்ந்தமருது மக்கள் தனது சொந்த காலில் தங்களையே ஆளுகின்ற ஒரு நிலைமையை நாங்கள் இந்த மண்ணிலே ஏற்படுத்துவோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரபின் காலத்தில் அரசியலில் நிற்பது என்பது ஒரு யுத்தத்தில் பங்கு பற்றுவது போன்றது. அவ்வாறான இறுக்கமான கால கட்டத்தில் நாங்கள் அரசியலில் அவர்களுக்கு பக்கபலமாக நின்று முஸ்லிம் காங்கிரசை கட்டி எழுப்பினோம். அப்போது அரசியலில் பக்கபலமாக இருப்பது என்பது எமது சமூகத்தின் சமூக விடுதலை என்று தான் நாங்கள் கருதினோம். அதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டோம். எமது வாக்குகள் ஒரு பலம் மிக்க பொருளாக மாற வேண்டும் தனித்துவம் மிக்க ஒன்றாக மாற வேண்டும் என்பதற்காகவே அஷ்ரப் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு 1980 களில் இந்த முஸ்லிம்களுக்கான தனி கட்சியை உருவாக்கினார்.
அப்போது இருந்தே நாம் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டோம்.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு சுனாமியின் பின்னர் நான் பிரதேச செயலாளராக வந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தனது அதிகாரத்தை கொண்டு செய்து இருக்கின்றேன் ஆனால் பல்வேறு சவால்கள் அதற்கு எனக்கு இருந்தது அதனையும் மீறி நான் சேவைகளை மக்களுக்காக செய்துவிட்டுத்தான் இங்கிருந்து சென்றேன்.
இங்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் ஆசிரியர் ஏ.எம். அஹுவர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் முஹர்ரம் பஸ்மீர், தொழிலதிபர் சரிப் ஹக்கீம், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருதுக்கு அரசியல்வாதிகளால் இழைக்கப்படும் அநீதிகளை பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல சாய்ந்தமருதுக்கு அரசியல்வாதிகளால் இழைக்கப்படும் அநீதிகளை பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல Reviewed by Editor on January 26, 2020 Rating: 5