மாற்றத்தை எதிர்பார்க்கு முன் மாற்றத்தை உன்னிலிருந்து ஆரம்பி பெண்ணே....


(பாலமுனை பஸீனா)

ஆண்களைக் குறை உரைக்க முன் பெண்ணே உன்னை
நீ உரைத்துக் கொள்...
உயர்ந்து கொள்...

அதெப்படி முடியும்
உன்னை நீ அறிமுகப்படுத்தாமல்
அவர்கள் உனக்கான வரைவிலக்கணம் வழங்குதல்
எப்படி சாத்தியமாகும்...

இருப்பதை இல்லாமலாக்கி
இல்லாததை இருப்பதாக்கி
நீ பிதற்றுகையில்
பிதற்றப்படுகையில்
பெண்களைப்பற்றிய ஆண்களின் புரிந்துணர்வு
எப்படி சாத்தியமாகும்...

எல்லாரும் அக்கா தங்கைகளுடனோ
அல்லாது போனால் அம்மாவுடனோ
அமைந்தவர்கள் தானே
அவர்கள் உணரத்தானே வேண்டும்
என்ற உன் எதிர்பார்ப்பு எங்கனம் சாத்தியமாகும்...
நில்...
வீட்டில் நீ நீயாய் இருக்கிறாயா...
ஆகக் குறைந்தது  மாதாந்தம் நீ படும்
வலியை
அவஸ்தையை
அலறலை
உன் சகோதரனோ
மகனோ
அறிய சந்தர்ப்பம்
அமைத்ததுண்டா...

அதற்கான அணையாடை
விளம்பரங்களில்
பம்மாத்துக்கள் பல விதம்...
சிரித்துத் துள்ளி
மலையேறுவதாயும்
மடு தோண்டுவதாயும்
அலங்கரிக்கப்படுகையில்
அடையாளப்படுத்தப்பட வேண்டிய
அவஸ்தைகள் எங்கணம் விளங்கப்படும்...

அதற்கப்பால் எத்தனை தாய்மார்
தன் தாய்மையை
அதன் அனுபவத்தை
அதன் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை
மரணத்தின் விளிம்பிற்கு சென்று
உயிர் பெற்ற
அவஸ்தை கலந்த ஆனந்தத்தை
தன் மகப்பேறான பிள்ளையிடம்
பிரியமுடன் உரைத்தவர்கள்...

வீடுகளில்
பெண்ணுக்கு அவசியமான
ஒழுக்கத்தையும்
கட்டுப்பாட்டையும்
கடுகளவிலும் சிதறவிடாமல் போதிக்கும் உங்களில் எத்தனை பேர்
பெண்மையை மதிக்க
காக்க வேண்டும் என
ஆண் மகனுக்கு போதித்தவர்கள்...

புள்ளியே வைக்காமல்
கோலத்தை எதிர்பார்ப்பது
எவ்விதம் சாத்தியப்படும்...

அத்தனை ஆணும்
திருமணத்தின் பின்தான்
பெண்மையை உணரவும் காக்கவும்
முனைய வேண்டும்
என்றால்
கற்பதற்கு காலமெடுப்பதும்
கருமாந்திரச் செயல்களும்
சாத்தியம் தானே...

மாற்றத்தை எதிர்பார்க்கு முன்
மாற்றத்தை உன்னிலிருந்து ஆரம்பி பெண்ணே...

மனிதப் பிறவியான ஆண்
பெண்மையைப் போற்றுதல்
பெண்ணிலிருந்தே
ஆரம்பிக்கப்பட வேண்டும்...

இதன்போது
கூக்குரலிட்டு
உன் குரல் கலைக்க முனையும்,
பெண்மையைத்
தூற்றும்,
குழந்தையிலும்
காமம் காணும்,
திருமணத்தின் பின்னும் திருந்தாத
ஜென்மங்களுக்கு
இங்கு இடமேயில்லை...
இங்கு கூறப்பட்டதெல்லாம்
மனிதர்களுக்கு மட்டும் தான்...
மனிதம் மட்டுமே தான்...!

மாற்றத்தை எதிர்பார்க்கு முன் மாற்றத்தை உன்னிலிருந்து ஆரம்பி பெண்ணே.... மாற்றத்தை எதிர்பார்க்கு முன் மாற்றத்தை உன்னிலிருந்து ஆரம்பி பெண்ணே.... Reviewed by Editor on February 26, 2020 Rating: 5