
M.Mohamed Nabsar, LLB, MBA (SEUSL)
இலங்கையானது 19ம் நூற்றாண்டின் பிற்காலப்பகுதியில் ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்டு காணப்பட்டது. அக்காலப்பகுதியில் அவர்கள் தாம் இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்திய சட்டதிட்டங்களை இலங்கையின் சட்டமுறைமையில் அவ்வப்போது உட்புகுத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு புகுத்தப்பட்ட சட்டமொன்றாகவே 1897ஆம் ஆண்டு 03ம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்கள் தடுப்பு கட்டளைச்சட்டம் காணப்படுகிறது.
குறிப்பிட்ட சட்டமானது 09 தடவைகள் திருத்தத்திற்குட்பட்டு இறுதியாக 2005ம் ஆண்டைய திருத்தம் நடைமுறைக்கு வந்தது. குறித்த சட்டத்தின் முதன்மை நோக்கமானது அச்சட்டத்தின் பிரிவு 02 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய தொற்றக்கூடிய ஏதாவது நோயினை தடுப்பது தொடர்பிலான அதிகாரத்தை அமைச்சருக்கு அளிப்பதே அதன் பிரதான நோக்கமாகும்.
அத்துடன் அதன் பிரிவு 13 ஆனது மூன்று வகையான நோய்களை உள்ளடக்கி 'நோய்' என்ற பதத்திற்கு வரையறை கொடுத்துள்ளது.
1. ஒட்டி பரவக்கூடியது - Contagious
2. தொற்றக்கூடியது - Infectious3. பெருவாரியாக பரவக்கூடியது - Epidemic
எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்டவை தொடர்பில் சட்டங்களை ஆக்கும் அமைச்சரின் அதிகாரமானது பரந்து பட்டது எனலாம். அத்துடன் பின்வரும் விடயங்கள் தொடர்பில் சட்டங்களை ஆக்கும் அதிகாரங்கள் காணப்படுகிறது.
1. விமானங்கள், வள்ளங்கள், படகுகள் என்பவற்றை தனிமைப்படுத்தி வைத்திருத்தல்.
2. நோய்களைக்காவக்கூடியநபர்கள் மற்றும் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுமிடத்து அவற்றை தனிமைப்படுத்தி வைத்திருத்தல்.
3. நோயுள்ள எல்லோரையும் தனிமைப்படுத்தி வைத்திருத்தல்.
4. கிணறுகள், குழிகள், கழிவுக்குழிகள் என்பவற்றை மூடுதல்.
5. குறித்த இடமொன்றை நபர்களினை தனிமாப்படுத்தும் பொருட்டு மட்டுப்பாடுகளை விதித்தல்.
6. சிகிச்சைக்காக அல்லது கண்காணிப்பிற்காக மக்களை அகற்றுதல்.
7 .வடிகான்கள், வீடுகள், கட்டிடங்கள், வேறு அசையா ஆதனங்கள் என்பவற்றை மூடுதல்.
8. நோய்த்தாக்கமுள்ளவருடன் தொடர்புடையதாக கருதப்படும் பொருட்களை அழித்தல்.
9. சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிக்கை செய்தல்.
10. இக்கட்டளைச்சட்டத்தின் கீழ் பணிகளை ஆக்கும் அலுவலர்களை
நியமனம் செய்தல்.
மேலும் இக்கட்டளைச்சட்டத்தின் பிரிவு 03 ஆனது குற்றமும் தண்டனையும் பற்றி குறிப்பிடுகிறது. அதாவது, அக்கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளை அல்லது இக்கட்டளைச்சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறுமிடத்து 06 மாத சிறைத்தண்டனையும் ரூபா 2000 இற்கு மேற்படாத தண்டப்பணமும் விதிக்கப்படும்.
எனவே குற்றமாக கருதப்படுவற்கு இரண்டு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.
- இக்கட்டளைச்சட்டத்தின் ஏதாவது ஏற்பாட்டை மீறுதல்
- இக்கட்டளைச்சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஏதாவது சட்ட ஏற்பாட்டை மீறுதல்.
எவ்வாறாயினும் இச்சட்டத்தின் பிரிவு 06 இற்கமைய குற்றவாளியாகக் கருதப்படும் நபர்கள் பிடியாணையின்றி கைது செய்யத்தக்க ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. அத்துடன் பிரிவு 07 கீழ் பாதுகாத்து வைத்திருத்தல் குற்றமொன்றாகக் கருதப்படுகிறது. அதற்கமைய, நபர் ஒருவர் வீடொன்றினுள் வைக்கப்பட்டிருந்தால் அல்லது பாதுகாக்கப்பட்டிருந்தால் அது குற்றமாகும்.
இது தவிர, தண்டனைச்சட்டக்கோவை பிரிவு 264 உம் இவ்விடயத்துடன் தொடர்புபட்டு காணப்படுகிறது. அதாவது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுமொருவர் தொடர்பில் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்க ஏற்பாடுகள் உண்டு. அத்துடன் 1940 களில் இக்கட்டளைச்சட்டத்தின் பிரிவு 02 இன் கீழ் தைப்பொயிட்டு,விஷ நோய்கள் மற்றும் கொளோரா போன்ற நோய்கள் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று நிருவாக ரீதியிலான அதிகாரங்களும் இக்கட்டளைச்சட்டத்தின் கீழ் காணப்படுகின்றன. சுகாதார சேவைகள் பொதுப்பணிப்பாளர் தனிமைப்படுத்தல் சூழலுடன் தொடர்புபட்ட விடயங்களை கையாளும் பொது அதிகார சபையாக காணப்படுகிறது. மேலும் மாநகர எல்லைக்குள் கௌரவ மேயரும், நகர சபை எல்லைக்குள் நகரபிதாவும் அதிகாரமுள்ளவர்களாக காணப்படுவர்.
நன்றி: Mr. Kalinga Indatissa, The President of Bar Association, Sri Lanka.
1897ஆம் ஆண்டு 03ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்கள் தடுப்பு கட்டளைச்சட்டம்.
Reviewed by Editor
on
April 05, 2020
Rating:
Reviewed by Editor
on
April 05, 2020
Rating: