2691 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்



ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கு அமைய கடந்த 2020.02.10ஆம் திகதியன்று நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி இதுவரை நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை வளாகத்திற்கு ஜனாதிபதி மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கைதிகள் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குற்றப் பணம் செலுத்த முடியாமை, பிணை வழங்கப்பட்டிருந்த போதும் பிணை நிபந்தனைகளை முழுமைப்படுத்த முடியாமை, மிகவும் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள், தண்டனைக் காலத்தில் பெரும் பகுதியை நிறைவுசெய்துள்ளவர்கள், மிகவும் பாரதூரமான சுகாதாரக் காரணங்களினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறையிலிருப்பவர்கள் மற்றும் பிணை வழங்குதல் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படாத சிறைக் கைதிகள் ஆகியோர் தொடர்பில் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளுக்கான இட வசதி பத்தாயிரம் பேருக்கு மட்டுமே ஆனதாகும். எனினும் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிறைக் கைதிகளாக உள்ளனர்.

விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணத்தை மீறாது, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை  நிறைவேற்ற்றி சிறந்த முறையில் சமூகத்தில் வாழ வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2691 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் 2691 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் Reviewed by Editor on April 04, 2020 Rating: 5