எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் ஊரடங்கு


கொரோனா தொற்று பரவல் சாத்திய வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள  கொழும்பு, களுத்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று (01) காலை தற்காலிகமாக நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வந்து, மீண்டும் ஏப்ரல் 6ஆம் திகதி  திங்கட்கிழமை காலை 6:00 மணிக்குத் தற்காலிகமாக நீக்கப்படுவதோடு, மீண்டும் அன்றைய தினமே, பிற்பகல் 2:00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தவிர்ந்த வேறு எவரும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் - ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குப் பயணிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது .

கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும்.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது அவற்றிலிருந்து வெளியேறுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா கிருமித் தொற்றுப் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களை வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் ஊரடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் ஊரடங்கு Reviewed by Editor on April 01, 2020 Rating: 5