பாரை நன்றாய் பாரு - கவிதை துளிகள்


(மருதமுனை நிஸா)

ஆட்டம் போட்ட ஊரு
அடங்கி கிடக்குது பாரு
கூட்டம் கூட்டி
களியாட்டம் காட்டி
இட்ட விதை
இன்று விளைச்சலாய்
மாறியது பார்த்தாயா

பாவங்கள் பலவிதமாய்
பாரினிலே மானுடம்
பண்ணிய புண்ணியம்
பாமரர் படித்தவரென
பாடுபடும் பரிதாபம் பாரு

போதையிலும் பேதையிலும்
வெறி கொண்டு தலை தெறித்த
கூத்துமுண்டு
பாரை நன்றாய் பாரு

சூதாட்டம்
வீணாட்டம்
கைகளில் சுருங்கி
ஹராம் ஹலால்
ஒவ்வொரு வீடுகளிலும்
விருந்தினராய் உட்கார்ந்திருந்தது
விதியின் விளையாட்டைப் பாரு

அநியாயங்கள்
அக்கிரமங்கள்
அட்டகாசங்கள்
அசிங்கங்கள்
அளவில்லாது ஆடையாக
அணியப்பட்டிருந்ததனை
அகத்தால்
அளந்து பாரை நன்றாய் பாரு

மனிதம் மதிக்கப்படாது
மனங்களின் உணர்வுகள்
மிதிக்கப்பட்டு
சின்னா பின்னமாய்
சிதையுண்டு மண்ணில்
அடக்கமானதே
இன்றைய வினையை
நன்றாய் பாரு

உதாசீனங்கள்
உதறல்கள் சிதறல்கள்
உறவுகளுக்குள்
உண்மை ஒழிந்திருந்தது
உண்மையாய் பொய்கள்
நடமாடியது
இன்றைய நிலையை
நன்றாய் பாரு

குளமும் குட்டையும்
விட்டதில்லை
சுத்தலும் சுழலுதலும்
முட்டியும் மோதியும்
நிலத்திலே நிற்கவில்லை
இறைவனை மறந்து
பறந்து திரிந்த நாட்களுமுண்டு
கண்ணை திறந்து
நன்றாய் பாரு இன்று

பசியென்றிருந்ததில்லை
ருசிக்காகவே கடைகடையாய்
குடைந்து திரிந்த நாளுமுண்டு
விண்ணப்பித்துவிட்டு
வேலைக்கு காத்திருப்பது போல
கே எப் சி காரியலத்தில்
வரிசையில் நின்றதுமுண்டு

போட்டியும் பொறாமையும்
வீப்பி ஏறுவதுபோல்
பொங்கி எழுந்தது
பணக்காரன் ஏழையென
பிரிவினை கொண்டு
பழகிய நாளுமுண்டு
இன்று என்ன நேர்ந்தது
பாரையும் ஊரையும்
நன்றாய் பாரு
பாவமன்னிப்பு கோரு
இது நல்ல வாய்ப்பு

பாரை நன்றாய் பாரு - கவிதை துளிகள் பாரை நன்றாய் பாரு - கவிதை துளிகள் Reviewed by Editor on April 14, 2020 Rating: 5