(பைஷல் இஸ்மாயில்)
இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் ஜே.கலிலுல் றஹ்மானின் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அப் பிரதேச சபையின் உறுப்பினர் ஜெமில் காரியப்பர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தவிசாளர் என்பர் நடு நிலையாகவும் பொதுமக்களின் பிரச்சினைகளை அவ்வப்போது நிறைவேற்றிக் கொடுக்கின்றவறாக இருக்கவேண்டும். இது அவ்வாறில்லாமல் அவரின் போக்குகள் யாவும் தனிப்பட்ட விடயங்களுக்காகவும், தனது தொழிலை அபிவிருத்தி செய்து மேன்மேலும் பெருக்கிக் கொண்டு செல்கின்றவறாகவே இருக்கின்றது.
மக்களின் பிரச்சினைகளையும், ஊர் சார்ந்த விடயங்களையும் சக உறுப்பினர்கள் சபையில் கொண்டுவந்து பேசுகின்றபோது அதற்கு சரியான தீர்மானங்களை கொண்டுவருகின்ற ஒரு தவிசாளராக அவர் இதுவரை காலமும் செயற்படவில்லை. இந்த தவிசாளரை நான் மட்டுமல்ல ஏனைய உறுப்பினர்களும் எதிர்க்கின்றனர்.
கொரோனா நோய் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக எமது நாட்டிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். விஷேடமாக எமது பிரதேசமான இறக்காமம் பிரதேச மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அம்மக்களுக்கு நிவாரணங்களை வழங்க உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என்ற விடயத்தையும், இது தொடர்பில் உறுப்பினர்களுடனான சந்திப்புக்களை அடிக்கடி மேற்கொள்ளவேண்டும் என்று கடந்த மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வின்போது நான் சுட்டிக்காட்டி பேசியிருந்தேன். அதைக்கூட அவர் கணக்கில் எடுக்காமல் அவரின் சொந்த வேலைகளை மட்டும் செய்பவராகவே இருந்து வந்தார். இப்படிப்பட்ட தவிசாளர் எமது ஊருக்கு தேவைதானா? என்பதை எமது மக்கள் முடிவெடுக்கவேண்டும்.
இந்த காலகட்டத்தில் மக்கள் சார்பாக செயற்படாத தவிசாளர் இனி எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் தேவைகளை ஒருபோதும் கவனிக்கமாட்டார் என்பது இந்த செயற்பாட்டின் மூலம் மிகத் தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
அவரின் போக்குக்கு எதிராக அனைத்து உறுப்பினர்களும் ஒன்றினைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதுபோன்ற கருத்தை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் உறுப்பினர் சுல்பிக்கார் மெளலவியும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தவிசாளரின் போக்கை கண்டித்தார் உறுப்பினர் ஜெமில்
Reviewed by Editor
on
April 30, 2020
Rating:
Reviewed by Editor
on
April 30, 2020
Rating:
