(பிர்னாஸ் இஸ்மாயில் - SLAS)
சுகாதாரத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதலாவது கட்டுப்படுத்தல் (Preventive), அடுத்தது குணப்படுத்தல் (Curative) என அழைக்கப்படும். நோய் வந்த பின்னர் வைத்தியசாலைகளில் வைத்து சிகிச்சை அளிப்பது குணப்படுத்தும் பிரிவில் அடங்கும். அதனை பொதுவாக நாட்டிலுள்ள பொது மற்றும் தனியார் வைத்தியசாலைகள் மிக சிறப்பாக செய்து வருகின்றன.
நோய்வர முன்னர் அதனை வரவிடாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் என அழைக்கப்படும். இதனை அரச பொது வைத்திய சுகாதார அலுவலகங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பிரிவினால் ஆற்றப்படும் சேவைகள் அளப்பரியவை. டெங்கு கட்டுப்பாடு, சிறு பிள்ளைகளுக்கான தடுப்பூசி வழங்குதல், கர்ப்பிணிமார்களுக்கான சுகாதார சேவைகள், உணவின் தரத்தினை பரிசோதித்தல் மற்றும் விலங்கறுமனைகளை மேற்பார்வை செய்தல் என்று எண்ணிலடங்காத சேவைகள் காணப்படும். ஏன் தற்போதைய நிலையில் தொற்றியுள்ள கொரோனா தடுப்பிலும் இவர்களது சேவைகள் அளப்பரியவையாக காணப்படுகின்றது.
நோய் வரமுன் காக்கும் நடவடிக்கையை தனியே சுகாதாரத்துறையின் வேலை தானே என்று பொடுபோக்காக விட்டுவிட முடியாது. அதன் பங்காளர்களாக உள்ளூராட்சி நிறுவனங்களும் மக்களும் பெரியளவில் காணப்படுகின்றனர்.
சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும், உரிய சுகாதாரமான பழக்க வழக்கங்களை தனிப்பட்டவர்கள் பேணுவதன் மூலமுமே நோய்வராமல் தடுக்க முடியும். எனவே மக்களுக்கும் இது விடயத்தில் பாரிய பொறுப்புக் காணப்படுகின்றது. அத்துடன் விழிப்புணர்வுடனும் நடந்து கொள்ள கடமைப்பட்டுள்ளனர்.
அதே போல் உள்ளூராட்சி மன்றங்களும் தங்களுடைய பிரதேசங்களில் பொதுச் சுகாதாரத்தினை முன்னேற்றுவதற்கு பாரிய ஒத்துழைப்பினை பொதுச் சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு வழங்க வேண்டும். உரிய வேளையில் கழிவு முகாமைத்துவத்தை (Waste management) நேர்த்தியுடனும், சுகாதாரத்திற்கு கேடற்ற விதத்தில் நடைமுறைப்படுத்துவதன் மூலமும், விலங்கறுமனைகளை (Slaughter house) சுத்தமாகவும், சுகாதாரமாகமும் வைத்திருப்பதன் மூலமும், மக்கள் அறிவுறத்தல்களைப் முறையாக பின்பற்றி நடப்பதை உறுதி செய்வதன் மூலமே நோயைக் கட்டுப்படுத்தும் செயன்முறையை உள்ளூராட்சி மன்றங்கள் வினைத்திறனாக மேற்கொள்ளலாம்.
இம்மூன்று கூட்டுப்பங்குதாரர்கள் ஒரு புள்ளியில் கூட்டுப் பொறுப்புடன் இவ்விடயத்தில் நடந்து கொள்ளாவிடில் பாதிக்கப்படப் போவது நாட்டு மக்களும், பொருளாதாரமுமே.
இன்று நாம் அதிகளவில் பல வகையான குற்றச்சாட்டுக்களை முத்தரப்பினராலும் முன் வைக்கப்படுவதைக் காணலாம். சரியான முறையில் மக்கள் குப்பைகளை தரம் பிரித்து தருகிறார்கள் இல்லை என்றும், பொதுக்கால்வாய்களில் வீட்டு நீரினை செலுத்துகிறார்கள் என்றும், பொது இடங்களில் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் விலங்குக்கழிவுகளை கொட்டுகிறார்கள் என்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மக்களை குறைகூறுகின்றனர்.
நேரத்திற்கு கழிவுகள் அகற்றப்படுவதுமில்லை,கழிவுகள் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதுமில்லை என்றும், விலங்கறுமனைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதுமில்லை என்றும், பொதுச் சுகாதார அதிகாரிகளினால் (PHI) விலங்கறுமனைகள் ஒழுங்கான முறையில் பரிசோதிக்கப்படுவதில்லை என்றும் பொது மக்களினால் ஏனைய உள்ளூராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
சில பிரதேசங்களில் உண்மையாகவே பொதுச் சுகாதார அதிகரிகளினால் இவ்வாறான மேற்பார்வைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று அவர்களது வாய்களினாலே கூறப்படுவதனை பொதுத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு சில அதிகாரிகளினால் தங்கள் கடமைகள் சரிவர செய்யாமல் விடப்படுகின்ற போது பாதிக்கப்படுவது யார்? சாதாரண பொதுமக்களே. இதற்கான முழுப்பொறுப்பையும் உங்களால் சுமக்க முடியமா?
அரசாங்கம் நோய்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அதிகளவில் முயற்சிகளை செய்துவரும் வேளையில் ஒரு சிலரின் அசமந்தப் போக்கானது முழு நாட்டையும், நோயினைக் குணப்படுத்தவதற்கு அதிக பண விரயத்தினையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இனியாவது சம்பந்தப்பட்ட திறத்தவர்கள் பொறுப்புடன் செயற்பட்டு வரமுன் காக்க பணி செய்யவும் அதற்கு எல்லோரும் துணை செய்யவும்.
சில வேளைகளில் விலங்கறுமனைகள் காலவரையறையின்றி மூடப்படவும் வாய்ப்புக்கள் உள்ளன.
வரமுன் காப்போம், சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்போம்..
Reviewed by Editor
on
April 25, 2020
Rating:
Reviewed by Editor
on
April 25, 2020
Rating:
