GMOA என்பது ஒரு தொழில் சங்கம். அதன் உறுப்பினர்களின் சேமநலன்களை கவனிக்க உருவாக்கப்பட்ட வெறும் ஒரு தொழிற்சங்கம்.
அரச துறையில் பணியாற்றும் வைத்தியர்களின் சம்பள முரண்பாடு, இடமாற்றம், வேறு ஏதாவது தமது உறுப்பினர்களை பாதிக்கும் விடயங்கள் என இது போன்ற இன்னொரன்ன நலன்களை கவனிக்கவே GMOA உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, சுகாதார துறை சார்ந்த கொள்கை வகுக்கும் நிறுவனமாக அது இல்லை. அதற்கான சட்டரீதியிலான அங்கிகாரமோ அல்லது ஏற்பாடோ அதற்கு கிடையாது. அது அரச நிறுவனமும் அல்ல என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஏ.எல்.எம்.தவம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில்-
அண்மைக் காலமாக GMOA தமது உறுப்பினர்களின் சேம நலன்களை கூட கவனித்ததாக தெரியவில்லை. இன ரீதியிலான சிந்தனைக்கு அடிமைப்பட்டு அதன் முஸ்லிம் உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முன்வராமல் மௌனம் காப்பதனை அவதானிக்க முடிகிறது.
உதாரணமாக, டொக்டர் சாபியின் விடயத்தில் அவரின் சார்பாக நிற்க வேண்டிய GMOA எந்த அக்கறையும் அற்று மௌனத்தில் புதைந்து போயிருந்தது. அவரின் தொழில்சார் (Professional) நிறைவேற்றுத் தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்ட போது இன அடையாளத்தை மறந்து குரல் கொடுத்திருக்க வேண்டிய GMOA ஊமையாகிப் போயிருந்தது.
மேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்கும் விடயத்திலும் இனவாத நிலைப்பாட்டையே GMOA எடுத்து நின்றது.
அது போன்றுதான் தற்போது, GMOA தமது எஜமானர்களை திருப்திப்படுத்த - "Exit Strategy" plan யை தயாரித்து - கொரோனா தொடர்பான விடயங்களில் முஸ்லிம்களை இனவாதத்திற்கு தீனிகொடுக்கும் கைங்கரியத்தை செய்துள்ளது.
ஆனால், ஏதாவது ஒரு விடயத்தில் அரசாங்கத்திற்கோ அல்லது சுகாதாரத்துறைக்கோ மருத்துவ துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் / கருத்துக்கள் (Experts Opinions)
தேவைப்பட்டால் - அவர்கள் அனுக வேண்டியது SLMA (Sri Lanka Medical Association) என்ற தொழில்சார் நிபுணர்களைகளை / வல்லுனர்களை கொண்ட மிகப்பழமையான நிறுவனத்தைத்தான் என்பதை இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.
ஏனெனில், இது GMOA யை போன்று வெறும் அரச துறை டொக்டர்களை மட்டும் கொண்ட நிறுவனமல்ல - மாறாக, சுகாதார துறையின் அனைத்து தொழில்சார் (Professional) நிபுணர்களையும் கொண்ட நிறுவனம். அதனை கொரோனா தொடர்பான ஒரு "Exit Strategy" planயை தயாரிக்க சொல்லாமல் - GMOA தயாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? என்பதை இலகுவாக புரிந்துகொள்ளலாம்.
அதுதான் இனவாத நிகழ்ச்சி நிரல். முஸ்லிம்களை பலி கொடுத்து GMOA தயாரித்ததை போன்றதொரு ஆவணத்தை - SLMA தயாரிக்காது. அது யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கும் ஆடாது. அதனாலேயே GMOA பயன்படுத்தப்பட்டது.
இவ்வாறான இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இழுபட்டுச் செல்லும் GMOA யில் முஸ்லிம் டொக்டர்கள் இன்னும் உறுப்பினர்களாக இருக்கத்தான் வேண்டுமா?
இனியும் அதன் உறுப்பினர்களாக இருப்பது நமது கண்களை நாமே குத்திக்கொள்வதற்கு சமனாகாதா?
நமது சமூகத்தை இனவாதிகளின் கையில் தாரைவார்க்க நாமும் காரணமாக இருப்பதாக அமைந்திடாதா?
எனவே,GMOAயில் அங்கத்துவர்களாக இருக்கும் அனைத்து முஸ்லிம் டொக்டர்களும் வெளியேறுங்கள்!
இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலில் இழுபட்டு செல்லும் GMOA யை நிராகரியுங்கள்!
GMOA க்கு எதிராக முதுகெலும்போடு எழுந்து நில்லுங்கள்! நாம் யாருக்கும் அடிமையில்லை என நிரூபித்துக் காட்டுங்கள் என்று முன்னாள் மாகாண சபை ஏ.எல்.எம்.தவம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் டொக்டர்களே! GMOA யிலிருந்து வெளியேறுங்கள் - நாடாளுமன்ற வேட்பாளர் தவம்
Reviewed by Editor
on
April 20, 2020
Rating:
Reviewed by Editor
on
April 20, 2020
Rating:
