தேசிய காங்கிரஸ் பொதுத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதனால் அஷ்ரப்பின் கனவு நனவாகும் - எஸ்.எம். தல்ஹா



(றிஸ்வான் சாலிஹூ)

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் மரணித்த காலத்தில் கனத்த இதயத்தோடு முஸ்லிம் காங்கிரசிற்கு பிரியாவிடை சொல்லி தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஸ்தாபித்தார்.

பன்மைத்துவ சமூகத்தில் சமூக நீதி மலர்ந்து முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகத்துடன் சமத்துவமாய், பாதுகாப்புடன் வாழ அவர் கனவு கண்டார். அவரது மரணத்தின் ஈரம் காயும் முன்னரே றஊப் ஹக்கீம் அஷ்ரப்பின் இலட்சிய கனவினை சிதைத்து, முஸ்லிம் காங்கிரஸ் எனும் இனத்தீயை தனது அரசியல் இருப்பிற்காக புது வடிவில் தொடர்ந்து மூட்டினார் என்று அரசியல் ஆய்வாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவருமான எஸ்.எம்.தல்ஹா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார். மேலும் அவர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இருபது வருடங்கள் முஸ்லிம் சமூகம் பயத்தோடும், சந்தேகத்தோடும் வாழ்வதற்கான சமூக இடைவெளி வியாபிக்க காரணமானது யார்?  அது றஊப் ஹக்கீம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

தற்காலத்தில் இயற்கை, சமூக மாற்றத்தினை அரசியல் பிரதிநிதித்துவத்தினூடாக செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தினை தந்துள்ளது. அஷ்ரப்பின் இலட்சிய கனவு வடிவில் தேசிய ஐக்கிய முன்னணிற்கு மாற்றீடாக தேசிய காங்கிரசினை நமது மக்கள் அடையாளம் காண்கின்றனர். அந்த இயக்கத்தினூடாக முஸ்லிம் சமூகம் தனது தேவைகளை வெல்வதற்கு ஒரு தரம் முயற்சிக்கத்தான் வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழாகும். மாவட்டத்தின் வாக்காளர் பரம்பலுக்கேற்ப இனவிகிதாசர அடிப்படையில் ஆசனங்கள் தெரிவாகும் போது சிங்கள சமூகத்திற்கு மூன்றும், முஸ்லிம் சமூகத்திற்கு மூன்றும், தமிழ் சமூகத்தின் சார்பில் ஒன்றுமே சென்றடையும் இதுவே யதார்த்தமாகும்.

அம்பாறை மாவட்டத்தின் சிங்கள சமூகத்தின் மூன்று உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன அணியில் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் சஜித் அணியின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தொலைபேசி சின்னத்தில் மூன்று சிங்கள வேட்பாளர்களினை உள்ளடக்கி ஆறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதனால் முன்பில்லாதவாறு விருப்பு வாக்குகள் வேட்பாளர்களுக்கிடையே பிரிவதற்கான சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.

மேலும், முஸ்லிம் காங்கிரஸ் கடந்த அரசாங்கத்தின் அந்திம காலத்தில் அதிகாரத்தில் இருக்கும் போது நடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் ஐம்பத்திரண்டாயிரமே.
தற்போது எதிர்கட்சி நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளதனால் இன்னும் அதன் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படலாம்.

முஸ்லிம் காங்கிரஸ் தொலைபேசி சின்னத்தில் ஐம்பதாயிரம் முஸ்லிம் வாக்கினை பெறுமென்று கருதினால், விருப்பத்தெரிவு ஒரு இலட்சத்தி ஐம்பதுனாயிரமாகும். இதனை ஆறு வேட்பாளர்களால் வகுக்கும் போது முதலாவது விருப்பு வாக்கு பெறுபவர் இருபத்தையிரத்தினையை சராசரியாக எடுப்பதற்கான வாய்ப்புள்ளது.
இதற்குள் தனி ஒருவருக்கு வாக்கிடும் வெட்டுக் குத்துகள் இம்முறை அதிகமாக நடைபெறலாம்.

மேற்படி சந்தர்ப்பத்தில் சிங்கள வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எந்த அளவில் கிடைக்கும் என்பதனை வரையறுக்க முடியாதுள்ளது. இருப்பினும் அவர்களில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நிஹால் கலபத்தி முஸ்லிம், தமிழ் மக்களின் வாக்குகளை பெறக்கூடிய நபராக காணப்படுகின்றார். இந்த சூழலில் முஸ்லிம் சமூகம் பெறவேண்டிய உறுப்புரிமை தொலைபேசியின் இலக்கத்தினை சுழட்டுவதனால் கிடைக்காமல் போய்விடலாம்.

தொலைபேசியில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்கள் மக்கள் வழங்கிய ஆணையயை மக்களுக்காக பயன்படுத்தாத வெற்றுக் காகிதங்களாவார்கள். அவர்களால் ஒருபோதும் முஸ்லிம் சமூகத்தின் தேவையை அமைச்சரவைக்கு கொண்டு செல்லமுடியாது. அவர்களின் பேரூந்து பாராளுமன்றத்தோடு திரும்பிவிடும். அதனை திருப்புகின்ற பணியினை கடந்த இருபது வருடமாக றஊப் ஹக்கீம் செய்து வருகிறார். ஆனால் அவர்கள் தெளிவாக ஒன்றினை செய்வார்கள் ஹக்கீமிற்கு சாமரம் வீசுவார்கள்.

தற்போது அம்பாறை முஸ்லிம்களுக்கு தேவை, நலன்புரி அரசியலூடாக இருப்பினை தக்கவைப்பதற்கான மாற்று நிறுவன முகாமே என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

நல்லாட்சி அரசாங்கத்தின் படு மோசமான மக்கள் விரோத போக்கினால் அந்த அரசாங்கத்தினையும், அதன் பங்காளிகளையும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்கடித்தது போல் பொதுத் தேர்தலிலும் மக்கள் தோற்கடிப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

அம்பாறை மாவட்டத்தில் கூட்டு இல்லாமல் அனைத்து வட்டாரங்களையும் வென்று  உள்ளூராட்சி சபைகள் இரண்டினை ஆள்கின்ற கட்சியாக தேசிய காங்கிரஸ் மட்டுமே காணப்படுகிறது.

தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிரேஷ்ட அரசியல் தலைவர்களில் முதன்மையானவராகக் காணப்படுகின்றார் . கடந்த மஹிந்த அரசாங்கங்களில் பல அபிவிருத்தி, உரிமை அரசியலினை செய்து காட்டியவருமாவார்.

இப்போது மாற்று அரசியல் மார்க்கமாக நமக்கு தென்படுவது தேசிய காங்கிரசும் அதன் தலைவர் அதாஉல்லாஹ்வும் என்பதில் மாற்று அபிப்பிராயம்  கிடையாது.

அம்பாறை மாவட்டத்தின் பாராளுமன்ற அதிகாரத்தினை அம்பாறை மாவட்ட மக்களே தீர்மானிக்க வேண்டும்.
மாகாண சபை உறுப்புரிமை அதிகாரத்தினை ஏற்கனவே ஊர்களுக்கிடையில் பகிர்ந்த அனுபவம் தேசிய காங்கிரசிற்கு இருக்கின்ற போதும் இம்முறை முதன் முதலாக பாராளுமன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் பாராளுமன்ற அங்கத்துவ அதிகாரங்களையும் ஊர்களிடையே பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

தேசிய காங்கிரசில் இணைதலுக்கான சாய்ந்தமருது மக்களின் நகர் தீர்மானமும், முன்னாள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.சலீம் அவர்களின் இணைவும் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். அது போல் தென்கிழக்கு பல்கலை கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் மற்றும் இளம் கல்வியாளர்களின் அரசியல் பிரவேசம் தேசிய காங்கிரசின் வெற்றியை எளிதாக்கிய நிலையில் இன்னும் இரண்டு ஊர்கள் கலந்துரையாடல் மூலம் ஊர்தீர்மானம் எடுத்தால் மூன்று பாராளுமன்ற உறுப்புரிமையை தேசிய காங்கிரசில் இலகுவாக பெற்றுக் கொள்ளமுடியும் என்பதோடு அது நிச்சயமாக நடை பெறலாம் என்று அவர் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய காங்கிரஸ் பொதுத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதனால் அஷ்ரப்பின் கனவு நனவாகும் - எஸ்.எம். தல்ஹா தேசிய காங்கிரஸ் பொதுத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதனால் அஷ்ரப்பின் கனவு நனவாகும் - எஸ்.எம். தல்ஹா Reviewed by Editor on May 30, 2020 Rating: 5