ஆந்திராவில் நச்சுவாயு கசிவு, பலர் மருத்துவமனையில்


ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரிலுள்ள ரசாயன ஆலை ஒன்றிலிருந்து நச்சுவாயு கசிவு ஏற்பட்டத்தில் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்தனர். அத்துடன் சுமார் 1,000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இறக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் வரை குடியிருப்பவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் தேசிய முடக்க நிலையால் நச்சுவாயு கொண்டுள்ள இரண்டு 5,000 டன் தொட்டிகளில் பராமரிக்கப்படவில்லை என்று உள்ளூர் போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விசாகப்பட்டினத்தின் புறநகர்ப்பகுதியிலுள்ள இந்த ரசாயன ஆலை எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

இந்த ஆலை, கண்ணாடி, ரப்பர் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திற்குத் தேவைப்படும் பாலிஸ்டைரின் என்ற நெகிழி வகையை தயாரிக்கிறது. 1961ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்நிறுவனம், தென்கொரியாவைச் சேர்ந்த எல்ஜி கெம் நிறுவனத்திற்குக் கைமாறி 'எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா' எனப் பெயர்மாற்றம் கண்டது.

விசாகப்பட்டினத்தில் உள்ள அனைவரது நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் வேண்டிக்கொள்வதாக டுவிட்டரில் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நிலவரத்தை உள்துறை அமைச்சும் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையமும் கவனித்து வருவதாகத் தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடமும் திரு மோடி பேசியதாகவும் தேவையான உதவியையும் ஆதரவையும் அளிக்க உறுதி கூறியதாகவும் இந்தியாவின் பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

ஆந்திராவில் நச்சுவாயு கசிவு, பலர் மருத்துவமனையில் ஆந்திராவில் நச்சுவாயு கசிவு, பலர் மருத்துவமனையில் Reviewed by Editor on May 07, 2020 Rating: 5