(ஏ.எல். நிப்றாஸ் - ஊடகவியலாளர்)
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்காமல் எரிக்கப்பட்டதை விடவும் மிகவும் வேதனையும், வலியும் நிறைந்த உணர்வு இப்போது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. இது, காரணங்களாலும் நியாயங்களாலும் குணப்படுத்த முடியாத வலியாகும்.
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்ததாக கூறப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரியூட்டப்பட்ட முஸ்லிம் பெண், உண்மையிலேயே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்றும், தவறுதலான ஆய்வுகூட அறிக்கையின் அடிப்படையிலேயே அவர் கொரோனா நோயாளியாக கருதப்பட்டு, எரிக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள பிந்திய தகவல்கள், இலங்கை மருத்துவ துறையில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள சமகாலத்தில், முஸ்லிம்களை கலக்கத்திற்குள்ளாக்கி இருக்கின்றது.
நாட்டில் இதுவரை கொவிட்-19 வைரஸ் தொற்றுக் காராணமாக 9 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 உடல்களுக்கு மேலதிகமாக இன்னும் இரு சந்தேகத்திகிடமான உடல்களும் எரியூட்டப்பட்டன. இதற்கிடையில், முதியர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்ட போதும், அது அப்படியே அடங்கிப் போனது. அந்த உடல் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகவில்லை.
உலக ஒழுங்கு
கொவிட்-19 வைரஸ்; தொற்று இலங்கையில் மாத்திரம் ஏற்படவில்லை. உலகெங்கும் இது ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்திருக்கி;ன்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்கலாக பல நாடுகளில் முஸ்லிம்களும் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். ஏன், இலங்கையர் பலரும் சிகிச்சை பலனின்றி மரணத்திருக்கின்றார்கள்.
இந்த நாடுகள் எல்லாம் இவ்வாறு மரணிப்போரின் சடலங்களை எரிக்கலாம் அல்லது புகைக்கலாம் என்ற இரு தெரிவுகளை அவர்களது உறவினர்களுக்கு வழங்கியுள்ளன. அதன்படி, இலங்கை முஸ்லிம்கள் உள்ளடங்கலாக முஸ்லிம்கள் மற்றும் வேறு சில மதப் பிரிவினரின் உடலங்கள் புதைக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.
இலங்கை அளவுக்கு கொவிட் வைரஸை கட்டுப்படுத்தவில்லை என்றாலும் கூட, நமது நாட்டை விடவும் பன்மடங்கு மருத்துவ. விஞ்ஞான அறிஞர்களையும் கொண்ட, எதையும் ஆய்வு செய்து நோக்குகின்ற மேற்குலகே நாடுகளே கொவிட்-19 இனால் மரணிப்போரின் உடல்களை புதைப்பதற்கு சட்ட ரீதியான அனுமதியை வழங்கியிருக்கின்றன.
ஏனென்றால், நிலத்தில் புதைத்தால் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? புதைப்பது பாதுகாப்பதற்றதா? என்ற விடயங்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்தே உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட்-19 மரணங்கள் தொடர்பான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருப்பவர்கள் பொறியியலாளர்களோ, பெரும் வர்;த்தகர்களோ அல்லர் என்பதையும் அவர்கள் மருத்துவ விஞ்ஞானத் துறையின் நிபுணர்கள் என்பதையும் மேற்குறிப்பிட்ட நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன என்பதே இதன் அர்த்தமாகும்.
திருத்திய விதி
இலங்கை இந்த வழிகாட்டல்களில் 'அடக்கம் செய்யலாம்' என்ற விதியை மட்டும் பின்பற்றவில்லை. ஆரம்பத்தில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, இலங்கையிலும் கொவிட் காரணமாக மரணிப்போரின் உடல்களை 'தகனம் செய்யலாம் அல்லது ஆழமாக புதைக்கலாம்' என்ற வழிகாட்டல் குறிப்புக்களை வெளியிட்டிருந்த சுகாதார அமைச்சு, முதலாவதாக முஸ்லிம் ஒருவர் மரணித்து அவரது ஜனாஸா இரவோடிரவாக எரியூட்டப்பட்ட பிறகு, அந்த விதிமுறையை திருத்தியமை கவனிப்பிற்குரியது.
இந்த நிலையில், 2ஆவதாக இன்னுமொரு முஸ்லிம் கொவிட் வைரஸ் காரணமாக உயிரிழந்ததை அடுத்து, அவரது ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக ஒப்படைக்குமாறு முஸ்லிம் சமூகம் கிட்டத்தட்ட மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டது. முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா உள்ளடங்கலாக அனைத்து எம்.பி.களும் துறைசார்ந்தவர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துப் பேசினர்.
நிலத்தில் புதைப்பதால் எதிர்காலத்தில் நிலத்தடியில் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக அப்போது விளக்கமளிக்கப்பட்டது. இந்த இடர்நேர்வு அபாயத்தை (ரிஸ்கை) கருத்திற் கொண்டே எரிக்கப்படுவதாக அரசாங்கமும் அதிகாரிகளும் கூறினர். எவ்வாறிருப்பினும், முஸ்லிம்களின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்ற தொனியிலேயே அன்று பதிலிறுக்கப்பட்டது. இது சற்று ஆறுதலளிப்பதாக இருந்தது.
அத்துடன் 'இவ்வாறு மரணிப்போரின் சடலங்களை எரிக்கவும் முடியும், புதைக்கவும் முடியும்' என்று இலங்கையின் மிகப் பெரிய வைத்தியர் அமைப்பான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் பகிரங்கமாக அறிவித்தது. இந்நிலையில், அரசியல்வாதிகள் இதில் புகுந்து நிலைமையை குழப்பாமல் இருந்தால் நுணுக்கமான முறையில் இதனைச் சாதிக்க முடியும் என்று முஸ்லிம் வைத்தியர்கள், துறைசார்ந்த சிலர் கூறினர்.
இருப்பினும், இத்தனை காலமும் ராஜபக்ச சகோதரர்களுக்கு மிக நெருக்கமாகஇருந்த அதாவுல்லா அதன் பிறகு முன்வைத்ததாக சொல்லப்பட்ட கோரிக்கை மற்றும் முன்மொழிவுகள் தட்டிக்கழிக்கப்பட்டமையும், 'இப்படிச் செய்தால் முஸ்லிம்கள் நோயை வெளிப்படுத்த தயங்குவார்கள்' என்று கூறிய போது அவருக்கு அளிக்கப்பட்ட பதிலும், அது அளிக்கப்பட்ட தோரணையும், முஸ்லிம்கள் தலைகீழாக நின்றாலும் அரசாங்கம் ஜனாஸாக்களை எரிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டது என்பதை குறிப்புணர்த்துவதாக காணப்பட்டது. இதற்கு சமாந்திரமாகவே, மேற்படி புதிய ஒழுங்குவிதிகளும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டன.
நிரூபிக்கப்பட்டதா?
நமது நாட்டில் இன்று நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் உள்ளனர். அவர்களது கழிவுகள் எங்கோ ஒரு இடத்தில் நிலத்துக்கு கீழேயே செல்கின்றன. அத்துடன், தற்காப்பு ஆடை அணிந்தே வைத்தியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். கைகழுவுதாலும், முகக் கவசம் அணிவதாலும் ஓரளவுக்கு பாதுகாப்பு பெறலாம் என்று சொல்லப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில், மரணித்த ஒரு உடலை 8 அல்லது 10 அடிக்கு கீழ் புதைத்தால் அதிலிருந்து வைரஸ் பரவும் என்று சொல்வது எதனடிப்படையில் என்ற கேள்வி முஸ்லிம்கள் மத்தியில் எழுந்தது.
அத்துடன், இறந்த உடலிலும் பக்றீரியாதான் வாழும் என்பார்கள். ஆனால், பொலித்தீனில் அடைக்கப்பட்டு அல்லது சீல் செய்யப்பட்ட இறந்த உடலில் (உயிருள்ள கலம் ஒன்று இல்லாத நிலையில்) வைரஸ் வாழும் என்பதற்கும், அது நிலத்தடியில் பரவும் என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றதா எனத் தெரியவில்லை.
இருப்பினும், கொவிட் ஜனாஸாக்களை புதைத்தால் நிலத்தில் பரவாது என விஞ்ஞான ரீதியான அறிக்கையை அரசாங்கத்திடம் உடனே சமர்ப்பிக்காமல் விட்டமை முஸ்லிம் சமூகத்தின்ன தவறாகும்.
அதேபோன்று,
- ஒதுக்குப் புறமாக ஒரு பிரத்தியேக மையவாடி,
- சீல் செய்யக் கூடிய பைகள்,
- பயிற்றப்பட்ட ஆட்கள் போன்ற ஏனைய ஏற்பாடுகளையும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக நின்று ஏற்பாடு செய்து அரசாங்கத்திடம் முன்வைக்க தவறியிருக்கின்றார்கள் அல்லது அதனை வெற்றிகரமாக செயலுருப்படுத்தவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆயினும், புதைத்தால் பரவாது என நிரூபிக்க கோருகின்ற இலங்கை சுகாதார அமைச்சானது புதைத்தால் பரவும் என்பதை நிரூபிப்பதற்கான விஞ்ஞானபூர்மான ஆய்வறிக்கைகள் எதனையும் முஸ்லிம்களுக்கு காட்டி, நியாயப்படுத்தியதாக ஞாபகமில்லை. அப்படிச் செய்தால் மனம் ஆறியிருக்கும்.
மாறாக, இலங்கையின் மிகப் பெரிய தொற்றுநோயியல் நிபுணரான பபா பலிகவதன, 'இவ்வாறு புதைப்பதால் வைரஸ் நிலத்திற்கு கீழ் பரவாது' என ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். அதிலிருந்து ஒருவாரம் கழித்து, இன்னுமொரு தொலைக்காட்சிக்கு அழைத்து வரப்பட்ட அவ் வைத்தியர், 'அரசாங்கம் எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பாததன் காரணமாகவே இவ்வாறு எரிக்கும் நடைமுறையை முன்னெடுப்பதாக' கூறினார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.
கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் சடலங்களும் எரிக்கப்பட வேண்டும் என்று விதிமுறை வகுத்ததை விட, அது திணிக்கப்பட்ட விதமே முஸ்லிம்களின் உணர்வுகளை கீறியது.
எது எவ்வாறிருந்தாலும், இதுபற்றி ஆயிரம் சந்தேகங்களும் கேள்விகளும் முஸ்லிம் சமூகத்திற்கு இருந்தாலும் கூட அரசாங்கத்தின் சட்ட விதிகளை மதித்து, அதற்குப் பின்னர் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்கியது என்பதை அரசாங்கம் மறந்து விடக் கூடாது.
அநியாயமான எரிப்பு
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு ஐ.டி.எச். மருத்துவமனையில் கொழும்பு 15 மோதரையைச் சேர்ந்த முஸ்லிம் தாய் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவருக்கு கணவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், எரியூட்டுவதற்காக பலாத்காரமாகவே கையொப்பம் பெறப்பட்டதாக அவரது புதல்வர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவரது ஜனாஸாவை எரிப்பதற்கோ அல்லது அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதற்கோ முஸ்லிம்கள் குறுக்கே நிற்கவில்லை. முஸ்லிம்கள் சட்டத்தை மதித்தார்கள், மதிக்கின்றார்கள். அந்த சட்ட விதிகளின் படி அவரது ஜனாஸா எரிக்கப்பட்டு விட்டது. அது வேறு விடயம்.
ஆனால், இப்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், 'கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி மற்றும் மோதரயைச் சேர்ந்த முஸ்லிம் பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா என்று வெளியான மருத்துவ அறிக்கைகளில் தவறு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு கொவிட் தொற்று இல்லை' எனவும் குறிபிட்டுள்ளார்.
அந்தவகையில், 'ஸ்ரீஜயவர்தனபுர ஆய்வுகூடத்தில் 8 தவறான அறிக்கைகளும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் 4 அறிக்கைகளும் உள்ளடங்கலாக 13 மருத்துவ அறிக்கைகள் பிழையான முடிவுகளை வெளிக்காட்டியுள்ளதாகவும்' அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு இன்று நாட்டில் பெரும் சலசலப்பையும் மருத்துவ சேவைகளின் 'சரியான தன்மை' பற்றிய ஐயப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
மருத்துவத் தவறுகள் இடம்பெறுவது ஒன்றும் அபூர்வமானதல்ல. இது உலகளவில் காலகாலமாக இடம்பெறுவதை நாமறிவோம். அதுவும் இப்படியான பேரவலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நெருக்கடியான காலத்தில் தவறுகள் நேர்வது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகின்றது.
எந்த மருத்துவரோ அல்லது ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளரோ வேண்டுமென்று பிழையாக ஒரு அறிக்கையை தயாரிப்பதோ, ஒருவரது உயிரிழப்புக்கு காரணமாவதோ கிடையாது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள், மருத்துவப் பணியாளர்களே கொவிட்டுக்கு எதிராக களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மறந்து விடவும்கூடாது.
ஆனால், அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கட்டமைப்பில் எங்கோ தவறு நடந்திருக்கின்றது என்பதை மறுக்கவும் முடியாது. அதனையே அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கமும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்படி சங்கம் குறிப்பிடுவது உண்மையென்றால், ஏதோ ஒரு நோய்க்காக மருத்துவ மனைக்குப்போன ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு, கொவிட்-19 தொற்று இருப்பதாக ஆய்வுகூட அறிக்கை கொடுக்கப்பட்டமையால் அவர் ஒரு கொரோனா நோயாளியாக கையாளப்பட்டிருக்கின்றார். அவரது மரணத்தின் பின் ஜனாஸா உடனடியாக எரிக்கப்பட்டிருக்கின்றது.
இது அரசாங்கத்திற்கும், சுகாதார அமைச்சுக்கும் அதிகாரிகளுக்கும் வேண்டுமென்றால் ஒரு சாதாரண மருத்துவத் தவறாக தோன்றலாம். ஆனால் நேரடியாக சம்பந்தப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு இது வலி நிறைந்ததாகும்.
அதுவும், கொரோனா நோயால் இறந்த முஸ்லிம்களை அடக்க முடியாத நிலையுள்ளதே என தினமும் வருந்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு இது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் செய்தியாகும்.
எனவே, இப்போது மீண்டு; விழிப்படைந்துள்ள 3 முஸ்லிம் கட்சித் தலைவர்களும், உலமா சபையும் காத்திரமாக செயற்பட வேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் உள்ள முஸ்லிம் வைத்தியர்களும் உண்மைகண்டறிந்து, பேசுவதற்கு முன்னுக்கு வர வேண்டும்.
அதேநேரத்தில் அரசாங்கம் இந்த விடயத்தில் தவறு இடம்பெற்றிருந்தால், முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, விசாரணைகளை நடாத்தி, பரிகாரம் தேட வேண்டும். அத்துடன் இதுபோன்ற பெருந்தவறு இனி இடம்பெறக் கூடாது.
எரித்தலின் வலி...
Reviewed by Editor
on
May 10, 2020
Rating:
