சாய்ந்தமருதில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நீர் வெட்டு மற்றும் நீர்த்தாங்கி தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆராயும் முகமாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும் பொதுத் தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம். சலீம் தலைமையில் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினர்களான எம்.ஏ. ரபீக், எம்.வை.எம். ஜஃபர், ஏ.ஆர்.எம். அஸீம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் எம்.ஐ. அப்துல் மஜீட் ஆகியோர் சாய்ந்தமருது நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அலுவலகத்திற்கு இன்று (28) விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
அங்கு, சாய்ந்தமருது நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை அலுவலக பொறுப்பதிகாரி எம். ஐ. அப்துல் மஜீட் அவர்களிடம் இது தொடர்பில் வினவியபோது, சாய்ந்தமருது நீர்த்தாங்கியில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்பதனை அவர் 100% உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கொண்டுவட்டுவானிலிருந்து வரும் நீரானது நிந்தவூரில் உள்ள சம்ப் இல் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது ஆகிய நீர் தாங்கிகளுக்கு நீர் பம்பி மூலம் நீர் அனுப்பப்படுவதாகவும், தற்போதைய நீர் பாவனையானது 100% இல் இருந்து 160% ஆக அதிகரித்து காணப்படும் நிலையில் நிந்தவூர் சம்ப் இல் பொருத்தப்பட்டுள்ள அதிக வலுக் கொண்ட நிர்ப்பம்பிமூலம் உறிஞ்சப்படும் நீரின் கொள்ளளவை உடன் மீழ்நிரப்பத்தக்க வகையில் கொண்டுவட்டுவானில் பொருத்தப்பட்டுள்ள நீர்ப்பம்பியின் திறன் போதுமானதாக இல்லாத படியினால் நிந்தவூர் சம்ப் இல் நீர் சேகரிக்கப்படும் வரை எடுக்கும் காலதாமதமே தற்போது அடிக்கடி ஏற்படும் நீர் தடைக்கு காரணம் எனவும் அது தவிர வேறு எதுவித திட்டமிடப்பட்ட நீர் வெட்டுக்களும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் உடனடித் தீர்வாக கொண்டுவட்டுவானில் அதிக வலுக் கொண்ட நீர்ப் பம்பி ஒன்றை மாற்றீடு செய்ய அதிகாரிகள் மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
தற்போது காணப்படும் நீர் விநியோகக் கட்டமைப்பானது சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட ஒன்றாக காணப்படுவதனாலும், அதிகரித்துவரும் சனப் பரம்பலுக்கு ஏற்றவகையில் அதிக நீரை விநியோகிக்கத்தக்கவகையில் நீண்டகால நோக்குடன் நீர் வழங்கல் கட்டமைப்பில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே இதற்கான நிரந்தரத் தீர்வைக் காணமுடியுமென்றும் தெரிவித்தார்.
தற்போது கிடைக்கப்பெறும் நீரானது சாய்ந்தமருது நீர்த்தாங்கியில் ஏற்றப்பட்டே பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப் படுவதாகவும், மேற்கூறப்பட்ட காரணங்களால் கிடைக்கும் குறைந்த நீர் அளவின் காரணமாக சாய்ந்தமருது தாங்கியில் நீரை சேகரித்து வழங்க முடியாமல் உள்ளதாகவும், மற்றும்படி இத்தாங்கியில் எதுவித பழுதுகளும் இல்லை என்பதனை அவர் பொறுப்புடன் உறுதிப்படுத்தினார்.
இந்த விடயங்களைக் கேட்டறிந்து கொண்ட முன்னாள் மேலதிக செயலாளரும், பொதுத் தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம். சலீம், இப் பிரச்சினையை முன்னாள் நீர்வழங்கல் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் ஊடாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வினைப் பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
(ஊடகப் பிரிவு)
சாய்ந்தமருது நீர் விநியோக பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற ஏற்பாடு, வேட்பாளர் சலீம் நடவடிக்கை
Reviewed by Editor
on
May 28, 2020
Rating:
