(ஐ.எல்.எம். தாஹிர்)
அட்டாளைச்சேனையில் மர்ஹூம் இஸ்மாயில் ஹஸறத் அவர்களின் மறைவையடுத்து கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி அதிபராகப் பதவியேற்ற மர்ஹூம் அல்ஹாஜ் உமறலியார் ஆலிம் அவர்கள் சுமார் பதினாறு (16) வருடங்களாக இக்கல்லூரியின் அதிபர் பதவியில் தன்னை அலங்கரித்துத் தியாக உணர்வோடு அர்ப்பணித்துச் செயற்பட்ட மார்க்க அறிஞராவார்.
'ஷர்க்கிய்யா' என்றால் உமறலியார் ஹஸறத் என்கின்ற அளவுக்கு பலரினதும் அபிமானத்தைப் பெற்று, ஆழமாக வேரூன்றி விட்ட அன்னாரது நாமம் இக்கலாபீடத்தின் உச்ச வளர்ச்சிக்கு உரமூட்டியதெனலாம். இவர் இங்கு அதிபராக சேவையாற்றிய காலம் இக்கல்லூரியின் வரலாற்றில் வர்ணிக்கப்படும் மணி மகுடமாகும்.
கடந்த 1940 ஆம் ஆண்டு கிழக்கின் முதல் அறபு ஆசிரியர் நியமனம் பெற்று முதன்மையாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அன்னார். அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்றதன் பின்னர், இக்கலாசாலையின் விரிவுரையாளராகவும் கடமை பார்த்தமை சிறப்புக்குரிய விடயமாகும். கடந்த 1951 ஆம் ஆண்டு கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் நியமனம் கிடைக்கப் பெற்று முதலாவது மௌலவி அதிபர் என்கின்ற நாமத்தையும் இவர் தட்டிக் கொண்டார்.
இக் கல்லூரியில் பௌதீக வளங்களின்றி இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில் அவைகளை நிவர்த்தி செய்து அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதில் அன்னாரின் பங்களிப்பு முதன்மை இடத்தைப் பெற்றிருந்தது. மார்க்கக் கல்வியோடு உலகக் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் அதீத கரிசனை காட்டிய அன்னார் 1972 ஆம் ஆண்டு முதல் அல்-ஆலிம் இறுதிப் பரீட்சைக்கும் மாணவர்கள் தோற்ற வழி வகைகளைச் செய்திருந்தார். அன்னாரது காலத்தில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்களின் வருகை பெருமளவு அதிகரித்துக் காணப்பட்டது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சராகவும் றாபிதாவின் இலங்கைப் பிரதிநிதியாகவுமிருந்த மர்ஹூம் எம்.எச். முஹம்மத் அவர்களைக் கொண்டு கல்லூரியின் செயற்பாடுகளை செவ்வனே நிறைவேற்றும் நோக்கில் றாபிதாவின் நிதியுதவி மூலம் கல்லூரியின் இடப் பற்றாக்குறையை நிவர்த்தித்து இரு மாடிகளை உள்ளடக்கிய கட்டடமொன்றை நிர்மாணிக்க அன்னார் மேற்கொண்ட முயற்சி பாராட்டுதலைப் பெற்றது.
விடுதி வசதி, வகுப்பறைகள், நூலகம், என்பன அமையப் பெற்று கல்லூரியானது வளம் பெறலாயிற்று. இக்கல்லூரியில் இவரது காலத்தில் மார்க்கக் கல்வியைக் கற்று வெளியேறிய மாணவர்கள் பலர் எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம், மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்று இன்றும் உயர் பதவிகளை வகித்துக் கௌரவத்துடன் விளங்குகின்றனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர்களுள் ஒருவராக இருந்து செயற்பட்ட அன்னார், சம்மாந்துறை தப்லீஹூல் இஸ்லாம் அறபுக் கல்லூரி, காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரி, ஆகியவற்றின் பரீட்சைக் குழுத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியதுடன், 'ஷர்க்கிய்யா' பழைய மாணவர்களின் அமைப்பினால் கடந்த 1984 ஆம் ஆண்டு 'iஷகுஷ; ஷர்க்கிய்யா' எனும் பட்டமும் சூட்டி கௌரவம் பெற்றுக் கொண்டார்.
மர்ஹூம் பீ.எம். ஆதம்பாவா (தங்கராசா ஹாஜியார்), ஓய்வு பெற்ற அதிபர் பீ.எம். அப்துல் காதர், ஓய்வு பெற்ற தபாலதிபர் மர்ஹூம் பீ.எம். ஜமால்தீன் ஆகியோரின் சகோததரான அன்னார் சுகவீனமுற்றிருந்த நிலையில் கடந்த 1991 ஆம் ஆண்டு வபாத்தானார்கள். 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் ஆரம்ப கால அதிபர் அல்ஹாஜ் மர்ஹூம் பீ. உமறலியார் ஆலிம்
Reviewed by Editor
on
June 30, 2020
Rating:
Reviewed by Editor
on
June 30, 2020
Rating:
