வாக்குகளை பெறுவதற்கு ஒரு சிலர் இனவாதத்தை மூலதனமாக பாவிக்கின்றார்கள், அது இனி பலிக்காது!!! அதாஉல்லாஹ் சூளுரை
(றிஸ்வான் சாலிஹூ)
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இம்முறை தங்களுடைய இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்கு மூலதனமாக இனவாதத்தை விதைக்கின்றார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் தேசிய காங்கிரசின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று (10) வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்று பிரதான வீதியில், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் எம்.சீ.லாபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட தேசிய காங்கிரஸ் முதன்மை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அதாஉல்லாஹ் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நமது முஸ்லிம் சமூகம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் வாழ வேண்டும். அது அல்லாமல் எங்களுக்கு இலங்கைக்குள் வேறு நாடு வேண்டும் என்று கேட்பதை எப்படி அங்கீகரிக்க முடியும் என்பதை உங்களிடம் நான் கேட்கிறேன். அப்படி கேட்போமாக இருந்தால் எம்மை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க முடியும் என்பதோடு, சட்டவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
ஆனால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்குகளை பெறுவதற்கு அவர்கள் இனவாதத்தை மூலதனமாக பாவிக்கின்றார்கள். தமிழர்கள் இந்த இனவாதத்தை பாவித்து, அதில் சிக்குண்டு வந்ததன் விளைவாக இதுவரை ஒரு அடி நிலத்தை கூட பெறமுடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். மேலும் மேலும் அந்த மக்கள் இனவாதம் ஊட்டப்பட்டு சின்னாபின்னமாகி இருக்கின்றார்கள்.
இதே நிலையைத்தான் இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் ஏற்படுத்த முனைகின்றார்கள். ஆனால் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் மூன்று இன மக்களும் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழ்வதற்குத்தான் அவர் தேசிய ஜக்கிய முன்னணி என்ற பெரிய இயக்கத்தை ஆரம்பித்தார்.
இந்த நாட்டை நேசிக்கும் தலைவன் எமக்கு வேண்டும். இந்த நாட்டை பிரிக்கும் தலைவன் எமக்கு தேவையில்லை. இந்த நாட்டை நாம் அதிகமாக நேசிக்க வேண்டும். இளைஞர்களே படித்தவர்களே எம் நாட்டின் வரலாற்றை தேடி தேடி படிக்க வேண்டிய காலமிது. இந்த நாடு எமது நாடு.
எமது தேசம், நமது நாடு என்று இந்த நாட்டுக்கு தேசப்பற்றுள்ள மக்களாக எப்போதும் இந்த தேசியப் காங்கிரஸ் போராளிகள் இருந்து கொண்டு வருகின்றார்கள். எப்போதும் இந்த தலைமை நாட்டுக்கு விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்பதை தான் கூறிக்கொண்டு வருகின்றது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எமது சமுகத்தை விற்று பிழைப்பு செய்கின்றவர்களாகத்தான் இப்போது இருக்கின்றார்கள். முஸ்லிம்களிடத்தில் ஒரு பேச்சும், சிங்கள மற்றும் தமிழ் பிரதேசத்தில் வேறு பேச்சும் பேசி தங்களை நல்லவர்களாக சித்தரித்து கொண்டிருக்கின்றார்கள்.
தேசிய காங்கிரஸின் போராளிகள் எப்போதும் இந்த நாட்டை நேசிக்கின்றவர்கள் என்பதை இந்த நாடு மறவாது. அதற்கு உதாரணம் தான் அக்கரைப்பற்றில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு அவர் மூன்று நிமிடம் பேசும் போது சொன்னார், மூன்று இனங்களையும் நம்பிக்கையில் கொடுக்கக்கூடிய தலைவர் என்றால் அது அதாஉல்லாஹ் தான் என்று சொன்னார். நாம் எப்போதும் இந்த நாட்டை நேசிக்ககூடியவர்கள் என்பதை ஒவ்வொரு இடத்திலும் பறைசாற்றிக் கொண்டு வருகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
வேட்பாளர் அறிமுக நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உலமாக்கள், கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாக்குகளை பெறுவதற்கு ஒரு சிலர் இனவாதத்தை மூலதனமாக பாவிக்கின்றார்கள், அது இனி பலிக்காது!!! அதாஉல்லாஹ் சூளுரை
Reviewed by Editor
on
July 11, 2020
Rating: