ஈழத்தின் முன்னணி எழுத்தாளர், இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர், ஆய்வாளர், இலக்கிய மாமணி மர்ஹூம் அ.ஸ. அப்துஸ் ஸமது B.A (Hons) அவர்கள் இன்று எம் மத்தியில் இல்லாத நிலையில் இலக்கிய உலகம் தவிக்கின்றது, தாகிக்கின்றது. அன்னாரை நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம்.
மர்ஹூம் அப்துஸ் ஸமது அவர்கள் கடந்த 1929 ஆம் ஆண்டு மார்க்கக் கல்வி அறிந்த நல்ல குடும்பத்தில் அக்கரைப்பற்றில் பிறந்தவர். 1946 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று அரசினர் பாடசாலையில் தனது கல்வியைத் தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தியடைந்தார். தனது ஆசிரியர் பயிற்சியை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1954-1955 களில் பயின்று கொண்டார்.
களனி வித்தியாலங்கார சர்வ கலாசாலையில் தமிழ் மொழிச் சிறப்புடன் பீ.ஏ. பட்டம் பெற்ற இவர், கொஸ்லந்தை கனிஷ்ட வித்தியாலயம், கல்முனை வீரத்திடல் அரசினர் முஸ்லிம் பாடசாலை, கம்பளை ஆண்டியகடவத்தை முஸ்லிம் பாடசாலை, கொழும்பு கிராண்ட்பாஸ் அல்-நாஸர் வித்தியாலயம், அக்கரைப்பற்று மத்திய மகா வித்தியாலயம் (தற்போது தேசிய பாடசாலை) போன்றவற்றில் தனது கற்பித்தல் காலத்தைக் கடத்தினார். கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகப் பதவி வகித்து அன்னார் கற்பித்தல் துறையில் மிகப் பயனுள்ள கல்வி ஆசானாகத் திகழ்ந்தார்.
தனது அறிவாலும், இஸ்லாமிய வாழ்க்கை வழி முறையாலும், நல்ல ஒழுக்க சீலராகப் பண்பானவராக, ஏனையோருக்கு முன்மாதிரியானவராக வாழ்ந்து காட்டிய அன்னார் ஆற்றல் மிகு ஆசிரியர், ஆளுமை நிறைந்த விரிவுரையாளர், அத்துடன் சிறந்த இலக்கியவாதியாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றுக் காணப்பட்ட அன்னாரது கவிதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், நாவல்கள், சமுதாயத்தின் மத்தியில் நீங்காத இடத்தினைப் பெற்றதுடன், நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்குடன் தனது பேனாவைப் பயன்படுத்தினார். இதன் மூலம் பல நூற்றுக் கணக்கான இலக்கியவாதிகளைத் தனது நண்பர்களாகப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். பேராசை, அகங்காரம், பொறாமை, வஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் போன்ற தீய செயல்களை வெறுத்து நல்ல விழுமியங்களைப் பின்பற்றி நடந்து காட்டிய அன்னாருடன் நான் மிகவும் நெருங்கிப் பழகி இருக்கின்றேன்.
1950 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் தினகரன் ஆசிரியர் பீட உதவி ஆசிரியராக இருந்தவரும், கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் தலைவருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எம். ஹனீபா அவர்களுடன் நெருங்கிப் பழகிய அன்னார்,லேக் ஹவுஸ் நிறுவனத்திற்குப் பல சந்தர்ப்பங்களில் இருவருமாக வருகை தந்து இலக்கியம் தொடர்பான ஆலோசனைகளை நடாத்திய காலத்தை மறக்க முடியாது.
அன்பு, பணிவு, மனித நேயம் என்பன அ.ஸ. வின் ஆழுமையென்று அழுத்தமாகக் கூறலாம். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் எனது 25 வருட சேவைக் கால அனுபவத்தில் எத்தனையோ தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் தோன்றி மறைந்திருக்கின்றார்கள். எம் மத்தியில் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். இவர்களிலெல்லாம் மிகவும் புனிதமான, வேறுபட்டதான, தனக்கென்று ஏற்றுக் கொண்ட இலட்சியப் பாதையில் சிறிதும் நழுவாது, திசை மாறாது, தனது தனித்துவத்தை, நிலை நிறுத்தி அத் தனித்துவம் பறி போகாமல் வாழ வேண்டும் என்பதிலும் அசையாத நம்பிக்கை வைத்து வாழ்ந்து காட்டியவர்.
தமிழ், இலக்கிய வரலாற்றில் அக்கரைப்பற்று மண்ணின் பெயரை முத்திரை பதித்த, மூத்த உத்தம புத்திரர். இலக்கிய உலகை அழகுபடுத்தி நல்லணிகலனாகத் திகழ்ந்தவர். அவரின் மறைவு இலக்கிய உலகுக்குத் தாங்கொண்ணாத் துயராகும். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தனித்துவமான, மண் வளச் சொற்கள், அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், இலக்கியப் படைப்புக்கள், மூலம் மணம் வீசச் செய்த பெருமைக்குரியவர்.
விருந்தோம்பலில் நண்பர்களையும், ஏனையோர்களையும், தனது இல்லத்திற்கு வரவேற்று இன்முகத்தோடு உபசரிப்பதில் நிகரானவர். அன்னாரின் இலக்கியப் பயணத்தில் ஊக்கமும், உதவியும் அளித்த மதிப்பிற்குரிய தினகரன் பிரதம ஆசிரியர், இலங்கைச் சட்டக் கல்லூரி விரிவுரையாளர், கலாசூரி சட்டத்தரணி அமரர் ஆர். சிவகுருநாதன் ஐயா அவர்களைக் கூட அந்திம காலத்தில் நினைவு கூர்ந்து கௌரவமாகப் பேசி, நன்றி விசுவாசத்தை பகிர்ந்து, மன நிறைவும், மன மகிழ்வும், பெருமையும் அடைந்த நன்றியின் சின்னம் அவர்.
மானிட நேசத்தில் கூடிய பற்றுள்ளவராகவும், அதற்காகத் தன்னுடைய வாழ் நாளையும், எழுத்தையும், தியாகம் செய்த அன்னாரது தனிப்பட்ட வாழ்வும், இலக்கிய வாழ்வும், புனிதமானது, நேர்த்தியானது. அந்த ஒழுக்கம் நிறைந்த இலக்கியவாதியின் நீண்ட இலக்கியப் பயணத்தில் கறையுமில்லை, கழிவுமில்லை. அன்னாரின் தனித்துவத்தைப் பறை சாற்றிக் கொண்டேயிருக்கும். சாப்பாடு இன்றி பசியோடு இருந்தாலும் தினசரிப் பத்திரிகை படிக்காமல் இருக்கமாட்டார். எவர் எதை எழுதி இருந்தாலும் அவருக்கும் அது பற்றி நல்ல விளக்கங்களைக் கொடுத்து மேலும் அவரை எழுதுவதற்குத் தூண்டுவார். அவர் வசித்த 'அன்பகம்' வீடானது ஒரு நூலகமாகவே காட்சியளித்ததை இன்றும் ஞாபகமாய்ப் பார்க்கின்றேன்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கமொன்றை அக்கரைப்பற்றில் ஆரம்பித்து அதன் தலைவராக செயற்பட்டவர். அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் கலைஞர்களை ஒன்று படுத்தி தேசிய கலைஞர் பேரவை ஒன்றை உருவாக்கி அதன் தலைவராகவும், இருந்து செயற்பட்டவர். எதிர்காலச் சந்ததியினரை வளர்த்தெடுத்து எழுத்தாளர்களை எழுத்துத் துறையில் ஈடுபட வைத்தமையை இலக்கிய உலகம் மறந்து விடாது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் அவர் நடாத்திய 'இலக்கிய மஞ்சரி' மூலம் அவரால் கொண்டு வரப்பட்ட புதுமைகள், அன்னாரின் வெற்றிக்கு ஓர் உதாரணம். இந் நிகழ்ச்சி மூலம் பல நல்லறிவுத் தகவல்களுடன், இலக்கியவாதிகளின் நேர்காணல்களும் இடம்பெற்றன. இதனால் இலக்கிய உலகின் நல்ல அணிகலனாகத் திகழ்ந்தார்.
மறைந்த அ.ஸ. வின் மகன் அஹமட் கியாஸ் ஒரு கலைப் பட்டதாரி மட்டுமல்ல, ஓர் எழுத்தாளரும் கூட. நாடகக் கலையில் ஆர்வமுள்ள நாடக ஆசிரியரும் அவர். தற்போது சம்மாந்துறை வலயக் கல்விப் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமை பார்க்கின்றார். அன்னாரது மகள் சித்தி றிஜா திருமணமாகும் வரை சிறப்பான சிறு கதைகளை எழுதியவர். அவரது சிறு கதைகள் தினகரன் வார மஞ்சரியில் அவ்வப்போது பிரசுரம் பெற்றிருக்கின்றன. இரண்டு நெடு நாவல்களை எழுதிப் பாராட்டும் பெற்றவர்.
அ.ஸ. வின் இலக்கிய சாதனை, இஸ்லாமிய உணர்வு, முஸ்லிம் சமூக எழுச்சி, பற்றிய சிந்தனைகளை இனத் தேர்வு செய்து அடுத்து வரும் பரம்பரை மதிப்பீடு செய்யத்தக்கதாய் சம காலத்தவர் அவசியம் பங்களிப்புச் செய்தல் இன்றைய காலத்தின் தேவையாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் அக்கரைப்பற்று மண்ணின் பெயரை முத்திரை பதித்து 'அ.ஸ' என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு இலக்கிய உலகை அழகுபடுத்திய அன்னார் கடந்த 2001 ஆம் ஆண்டு எம்மை விட்டும் இறையடியெய்தி விட்டார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்).
மறுமையில் அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திப்போமாக!
இலக்கிய மாமணி அ.ஸ. அப்துஸ் ஸமது...
Reviewed by Editor
on
July 02, 2020
Rating:
Reviewed by Editor
on
July 02, 2020
Rating:
