புலமைப் பரிசில் பரீட்சை தேவை தானா???



புலமைப்பரிசில் பரீட்சை தேவையா அல்லது தேவையில்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் வலுத்த நிலையில் அதன் வெட்டுப்புள்ளியை 160 மேல் அதிகரித்து இரண்டு வினாத்தாள்களிலும் 159புள்ளிகள் எடுத்த பிள்ளையை தோல்விக்குரிய பிள்ளையாக சமூகமட்டத்தில் அடையாளப்படுத்திய பெருமை யாருக்குரியது என்ற கேள்வி சமூகத்தில் எழும்புகிறது.


இந்த பிள்ளைகளின் அழுகையை அச்சத்தை எதிர்காலம் மீதான நம்பிக்கையீனத்தை எப்படி போக்குவது என தெரியவில்லை, ஒரு பிள்ளையின் உளவியலை தனது நிலையை உணர முடியாத பிஞ்சிலேயே  பலவீனப்படுத்தும் ஒரு பரீட்சை அல்லது கல்விக்கட்டமைப்பு நாட்டிற்கு கிடைத்த சாபம் என  கூறுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.


இந்த பரீட்சை ஊக்கத்தொகை , முன்னணி பாடசாலைகளுக்கான அனுமதி என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட போதிலும் இது பயணிக்கும் திசை ஆபத்தானது.     பத்தே வயது  பச்சிளங்குழந்தைகளின் மீது உளவியல் தாக்குதலை கட்டமைத்து நடத்துகின்றது என்ற உண்மையை இலகுவாக உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் உளவியலாளர்கள், கல்வியியலாளர்கள் கல்வி அதிகாரிகள் உள்ளனரா என நினைக்க முடிகின்றது‌.


இவ்வளவு காலத்தில் அது என்ன இலக்கை அடைந்தது என கேள்வி எழுப்பினால் ஒரு புறம் பத்து வயதான அப்பாவி பிஞ்சுகளின் உள்ளங்களை கொன்று உளவியல் கொலையை மிக திறம்பட நடாத்தும்  பரீட்சை நிறுவனமும் மறு புறம் வரட்டு கெளரவத்தை பிள்ளையின் மீது திணித்து கொடுமைப்படுத்தும் அம்மாக்களும் அப்பாக்களும் பிள்ளைகளின் உரிமை மீறல்களை செய்து வருகின்றனர் என்று தான் கூற முடியும்.


இந்தப்பரீட்சை கெட்டிக்காரனை தேடுகிறதா அல்லது தரமற்றவர்களை அடையாளம் காட்டுகிறதா அல்லது ஒரு சிலரை திறமையானவன் எனக்காட்டுவதற்குப் பலரை கோழைகளாக்கி விடும் இம்முறையில் மாற்றம் வேண்டாமா??


இந்த பிஞ்சு உள்ளத்திற்கு எம்மால் கூறக்கூடியது....


பரீட்சைகள் வெறும் வெற்றி, தோல்விகளை மட்டுமே நிர்ணயிக்கின்றன!


அது வாழக்கையை நிர்ணயித்து விடப் போவதில்லை..!


எத்தனையோ பரீட்சைகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் தோல்வியை தழுவியிருக்கின்ற வரலாறுகளை நாங்கள் கண்கூடாக கண்டிருக்கின்றோம்..


பரீட்சையில் தோற்றால் தோளில் தட்டி  நம்பிக்கை ஊட்டுங்கள்...


ஒரு பரீட்சையின் முடிவு உன் எதிர் காலத்தை மாற்றி விடாது என்று தைரியம் கொடுங்கள்  பிள்ளையை முத்தமிடுங்கள்..


பரீட்சையில் தோற்றால் விடாமுயற்சியை கற்றுக்கொடுங்கள்..


பிள்ளைகள் மென்மையான  பூக்கள்,

உங்கள் வறட்டு கெளரவத்திற்காக  அதனை  பறித்து விடாதீர்கள்...


அவர்கள் பூ மரங்களில் பூவாக இருக்கவே  ஆசைப்படுகிறார்கள் அதனால் பூச் சென்டாக்க  நினைத்து வாட வைத்து விடாதீர்கள்.!!


தொகுப்பு-
ஆசிரியர் இப்றாலெப்பை பைஷால்
புலமைப் பரிசில் பரீட்சை தேவை தானா??? புலமைப் பரிசில் பரீட்சை தேவை தானா??? Reviewed by Editor on November 16, 2020 Rating: 5