
(றிஸ்வான் சாலிஹூ)
உதைபந்தாட்ட துறையில் பல வருட அனுபவத்தை பெற்று தன் வாழ்நாளில் பல சாதனைகளை படைத்து இன்றைய இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஓர் பயிற்சியாளராக,ஆலோசகராக,முன்மாதிரி வீரரும், உதைபந்தாட்ட துறையில் தனக்கென்று நாமம் பதித்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உபதலைவர் மர்ஹும். என்.ரீ.பாரூக் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து நாளைய தினம் (18.11.2020) ஓராண்டு பூர்த்தியாகின்றது.
இவர், இளமைப் பருவத்தை உதைப்பந்தாட்ட துறையில் அதிக ஆர்வம் காட்டி தன்னை ஒரு சிறந்த கோல் காப்பாளாராகவும், இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளணத்தின் உதைப்பந்தாட்ட நடுவராவும் தன்னுடைய வாழ்வை ஆரம்பித்து கட்டம் கட்டமாக தன்னை வளர்த்துக் கொண்ட அவர் விளையாட்டு வீரராக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அணியில் விளையாடினார்.

அந்த வகையில் அம்பாறை மாவட்ட அணி மேற்கு ஜேர்மனி அணியுடனான ஒரு நட்புறவு ஆட்டத்தில் கலந்து கொண்ட போது அந்த போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் காப்பாளராக கடமை புரிந்த அவர் மேற்கு ஜேர்மனி அணியின் துல்லியமான கோல் Shoot அத்தனையும் தவிடு பொடியாக்கினார். இவருடைய பந்து தடுக்கும் பாணி (Style) மேற்கு ஜேர்மனி கோல்காப்பாளரின் கவனத்தை ஈர்த்த போது அவரை பாராட்டி தன்னுடைய கோல்காப்பாளர் பயன்படுத்துகின்ற கையுறைகளை அவருக்கு பரிசாக வழங்கினார்.
நடுவர் துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவர் சர்வதேச போட்டிகளில் பிரதான நடுவராகவும் கடமை புரிந்த அனுபவத்தை கொண்டிருந்தார் மர்ஹும் பாரூக் அவர்கள்.

இதற்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளணத்தின் தலைவராகவும், மட்டக்களப்பு மாவட்ட நடுவர்கள் சம்மேளணத்தின் தலைவராகவும், அக்கரைப்பற்று உதைப்பந்தாட்ட லீக்கின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
மீண்டும் அவர் தன்னுடைய அரச தொழில் நிமித்தம் முழுமையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கி இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதிலிருந்து, காத்தான்குடி உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவராக இருந்து அம்மாவட்ட உதைபந்தாட்ட துறையில் பல மாற்றங்களையும், வெற்றிகளையும் பெற்றுக் கொடுக்க தன்னை முழு மூச்சாக பயன்படுத்திக் கொண்டார்.
உதைப்பந்தாட்டத்தில் அவருக்கிருந்த விருப்பம் அதன் மீது கொண்ட காதல் என்பவற்றை இறைவன் பொருந்திக் கொண்டதற்கு சான்றாக அவர் மரணிக்கும் வரை இலங்கையின் உயரிய இடமாகிய இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் (FFSL) உப தலைவராகவே செயற்பட்டார் என்பதையும் மறக்க முடியாது.
அழகிய நற்பண்பும்,மும்மொழியில் பாண்டித்தியம் பெற்ற அவர், சிரேஷ்ட அரச வங்கி உத்தியோகத்தர் என்ற பதவியையும் அலங்கரித்துக் கொண்டிருந்தார்.
அவரின் வெற்றிடம் இன்னும் நிரப்ப முடியாத இடைவெளியாகவே காணப்படுகிறது என்பதை நினைக்கும் போது இப்போதும் கவலையாக இருக்கிறது.
இறைவா! அண்ணாருடைய நற்கருமங்களை பொருந்திக்கொண்டு நாளை மறுமையின் வெற்றியைக் கொடுத்து உயர்தரமான ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவாயாக ஆமீன்.
Reviewed by Editor
on
November 17, 2020
Rating: