
(றிஸ்வான் சாலிஹூ)
கடந்த 35 நாட்களுக்கும் மேலாக, அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடுதலை, எமது தாய்மார்களும் சகோதரர்களும் நோற்ற நோன்புக்கும், அவர்களின் பிரார்த்தனைகளுக்குமான பரிசாகும் என்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் தெரிவித்தார்.
தலைவர் ரிஷாட்டின் பிணை விடுதலையின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,
"சிறுபான்மை மக்களின் தேசியத் தலைவர்களுள் ஒருவராக இருக்கின்ற, பெருவாரியான ஆதரவுத்தளத்தோடு வளர்ந்து வரும் ரிஷாட் பதியுதீன் என்கின்ற அரசியல் ஆளுமையை, எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற பெருந்தேசிய இனவாதத்தின் கபடநாடகத்தின் ஓரங்கமாக, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திய போதிலும், இன்று எமது திறமையான சட்டத்தரணிகளாலும், உண்மையான முன்வைப்புக்களாலும் எமது தலைவருக்கு பிணை கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
எமது தலைவர் மீது இது மட்டுமல்ல, இன்னும் பல குற்றச்சாட்டுகளை சுமத்திய போதிலும், அவை ஒவ்வொன்றாக பொய் என நிரூபணமாகி வருகின்ற சூழலில், இன்றும் கூட எமது தலைவருக்கு கிடைத்திருக்கும் இந்த பிணை விடுதலை, இந்த தேசத்தில் நீதித்துறை சுயாதீனம் ஓரளவு காப்பாற்றப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது.
எமது தலைவரின் இந்த பிணை விடுதலைக்காக நோன்பு நோற்று, பிரார்த்தித்த அனைத்து தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள் என அனைவருக்கும் இத்தருணத்தில் என் சார்பிலும், எமது கட்சி சார்பிலும் மகத்தான நன்றிகளை சொல்லிக்கொள்ள விழைகின்றேன்.
இன்ஷா அல்லாஹ் அனைத்து பொய்யான குற்றச்சாட்டுக்களில் இருந்தும் தலைவர் ரிஷாட் "நிரபராதி" என, இந்த நாடு உரத்தச் சொல்லும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்தார்.
Reviewed by Editor
on
November 25, 2020
Rating: