
(றிஸ்வான் சாலிஹூ , கலீல்)
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 7224 பேருக்கு தலா 10,000/- பெறுமதியான ஏழு கோடி ரூபாய் பெறுமதியுடைய உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணி அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தால் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க அவர்களின் பணிப்புரை மற்றும் ஒத்துழைப்பின் பேரில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான் அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய அக்கரைப்பற்று பிரதேச செயலகக் கணக்காளர் எஸ்.எல்.சர்தார் மிர்ஷா அவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பொதி செய்யப்பட்டு இப்பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் நகர் பிரிவு-5யைச் சேர்ந்த 575 குடும்பங்களுக்கான முதற்கட்டமாக 5,000/- ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் இன்று (06) வழங்கி வைக்கப்பட்டன.
இம் நிகழ்வில் அம்பாரை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்..லத்தீப் , உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் , கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் , நிருவாக கிராம உத்தியோகத்தர் , பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
