
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்றில் கொறோனா செயற்பாட்டு வழிகாட்டல் குழு கூட்டம் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் கூடி, முடக்கப்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் பற்றி ஆலோசித்து சில முக்கியமான தீர்மானங்களை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி மாநகர மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று-5, அக்கரைப்பற்று-14, நகரப் பிரிவு-3 போன்ற பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் தொற்றாளர்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதால், மேற்குறிப்பிட்ட பிரதேசங்கள் அவசரமாக விடுவிக்கப்பட கூடிய சாதக நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், நகரப் பிரிவு-1 இல் உள்ள பொதுச்சந்தை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசமாகவே கருதப்படும். பொது சந்தைக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, பொதுமக்கள் சென்றுவரவும் ,வியாபாரிகள் தங்கள் வியாபாரங்களில் ஈடுபடவும் ஒரு புதிய திட்டத்தை வர்த்தகர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கவும் தீர்மானிக்கப்படுவதாகவும், அதற்கான கலந்துரையாடல் வர்த்தகர்களுடன் நாளை (21) இடம்பெறும் என்று மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
அத்தியவசிய தேவையான மரக்கறி , மீன் , இறைச்சி மற்றும் பல சரக்கு பொருட் கடைகளுடன், பாமசிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாலை 6 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்பதோடு, பொதுமக்கள் ஒன்று சேரும் நிகழ்வுகள் மற்றும் பள்ளிவாசல்களில் தொழுகை என்பன தொடர்ந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்கள் உணவுகளை கொண்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவதுடன் பாடசாலை மற்றும் சலூன்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டு காணப்படும் என்றும், வங்கிகள் பகல் 12 மணிவரை மட்டுபடுத்தபட்ட அளவில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சுகாதார துறை அதிகாரிகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் கவனத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் காத்திரமான ஒரு முடிவை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி குறிப்பிட்டுள்ளார்.
