கூலித்தொழிலாளர்களை காப்பாற்றுங்கள்


(அஜ்வர் அஸீஸ்)

சுகாதார கட்டுப்பாட்டுடன் கூலித்தொழிலாளர்களை அவர்களது தொழில்களில் ஈடுபட அனுமதி வழங்க முடியுமா என்பதை அதிகாரிகள் ஆலோசனை செய்யவேண்டும்.

கொரோனா தொற்றுக்காரணமாக முடக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்ற்று சுமார் பன்னிரண்டு நாட்களிற்கு மேலாக முடங்கிக்கிடக்கின்றது. சுகாதார பரிசோதனைகளில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதனால், மேலும் பல நாட்கள் அல்லது மாதங்களுக்கு முடக்கம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறாக, தொடர்ச்சியான முடக்கத்தின் மூலம் அக்கரைப்பற்று மக்களின் அனைத்து தரப்பினரும் பெரும் சிரமங்களுக்குள்ளாகியிருக்கின்றார்கள். ஆனாலும், ஈடு செய்ய முடியாத நெருக்கடிக்குள் கூலித்தொழிலார்களின் குடும்பங்கள் தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன.

தனவந்தர்களினாலும், அரசாங்கத்தினாலும் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் அவர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமலிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அத்தியாவசிய தேவைகளில் உணவுத்தேவைக்காக மட்டும் ஒருசில உதவிகள் செய்யப்பட்டாலும், அவைகளைக்கொண்டு உணவுத்தேவையை முழுமையாக ஈடுசெய்ய முடியாமலிருக்கின்றது. 

வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் கூடுதலான அங்கத்தவர்கள் இருக்கும் குடும்பங்களில் மூன்று நாட்களைக்கூட தாக்காட்ட முடியாமலிருக்கின்றது. விடிந்தால் யாருடைய கையையாவது எதிர்பார்த்து எங்கும் நிலைக்கு இன்று கூலித்தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.

தேவைகளை நிறைவேற்ற கூலித்தொழிலாளர்கள் அடுத்தவர்களிடம் கடன் கேட்டு கையேந்தி திரிகின்றார்கள். கடனைப்பெற்றாலும் எதிர்வரும் காலங்களில் கடன் சுமையால் தவிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நாளாந்த வருமானத்தில் மிகவும் இறுக்கமாக வாழ்க்கையை ஓட்டிச்செல்லும் கூலித்தொழிலார்கள் தற்போது பெறும் கடன்களை எதிர்காலத்தில் எவ்வாறு இறுக்கப்போகின்றார்கள்? வங்கிகள், ஏனைய நிதி நிறுவனங்கள்கூடி இவர்களிற்கு கடனடிப்படையில் நிதி வசதி வழங்க முன்வராது. அவைகளின் கடன் பெறவேண்டுமானால் வங்கிக்கணக்கு, ஆதாரம் என ஆயிரத்தெட்டு விடயங்கள் வேண்டும். அவ்வாறுதான் கடன் பெற்றாலும் ஒரு குறுகிய காலத்திற்குள் எவ்வாறு அதிலிருந்து மீளப்போகின்றார்கள்? வட்டி கட்டியே வாழ்ந்து முடிக்கவேண்டும் அல்லது இருப்பிடத்தை விற்று கடனை இருந்துவிட்டு அங்குமிங்கும் அலைந்து திரியவேண்டும். 

நோய் தொற்றுக்காரணமாக ஊரை முடக்கம் செய்ய கட்டளை இட்டவர்கள் கூலித்தொழிலாளர்கள் எதிர்காலத்தில் இதனால் எதிர்நோக்கப்போகும் சவால்களை முறியடிக்க திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தவேண்டும். அல்லது அவர்களை சுகாதார முறைப்படி தொழில் செய்ய அனுமதிக்கவேண்டும். 

ஆகவே, சுகாதார முறைகளை பின்பற்றி கூலித்தொழிலாளர்களை அவர்களது தொழிலை செய்ய அனுமதி வழங்குவதா? அல்லது எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்களை முறியடிக்க திட்ட்ங்களை வகுத்து செயற்படுவதா? என்பதை ஆலோசனை  செய்து தீர்மானம் எடுக்கவேண்டியது ஊர் பிரமுகர்களினதும், அதிகாரிகளினதும் பொறுப்பாய கடமையாகும்.

கூலித்தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் கூலித்தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் Reviewed by Editor on December 08, 2020 Rating: 5