அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன், அந்நாட்டின் புதிய பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் லொய்ட் ஆஸ்டினை தெரிவு செய்துள்ளார். 67 வயதான ஜெனரல் ஆஸ்டின், பெண்டகனுக்குத் தலைமை தாங்கவுள்ள முதலாவது ஆபிரிக்க அமெரிக்கர் ஆவார்.
முன்னாள் ஜனாதிபதி ஓபாமா நிர்வாகக் காலத்தில் 2013 தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை அமெரிக்கப் படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்துக்கு தலைமை தாங்கியவர் ஜெனரல் லொய்ட் ஆஸ்டின். தெற்காசியா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகிய பிராந்தியங்களில் அமெரிக்கப் படைகளின் நடவடிக்கைகளுக்கு அவரின் கீழான படைகள் பொறுப்பாக இருந்தன.
அதற்கு முன் ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு அவர் தலைமை தாங்கினார். சுமார் 40 வருடங்கள் இராணுவத்தில் பணியாற்றிய அவர் 2016 ஆம் ஆண்டு தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
எனினும், ஜெனரல் லொய்ட் ஆஸ்டின் ஓய்வு பெற்று 7 வருடங்கள் பூர்த்தியாகததால் பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு அவர் தெரிவு செய்யப்படுவதற்கு அமெரிக்க காங்கிரஸின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
