(எம்.எஸ்.நூர்தீன்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், நகர சபை, சுகாதாரப் பணிமனை, பிரதேச செயலகம், ஜம்இய்யதுல் உலமா, பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிராந்திய கொவிட் 19 செயலணியின் இராணுவ பொறுப்பதிகாரி ஆகியன இணைந்து எமதூர் இத்தருணத்தில் எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாகவும், நேற்யை தினம் (26) எமது பிரதேசத்தில் இறை நியதியின் பிரகாரம் ஏற்பட்ட முதலாவது மரணத்தோடு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் பொதுமக்களின் உள்ளங்களுக்கு ஆழமாகவும் எச்சரிக்கையாகவும் வழங்க வேண்டிய அறிவுரைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, மேற்குறித்த விடயம் தொடர்பாக காத்தான்குடி பிரதேச மக்களுக்கு இறுதி சிவப்பு எச்சரிக்கையை அனைத்து தரப்பினரும் இணைந்து விடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
கொவிட் 19 இரண்டாம் கட்ட அலை கடந்த அலையை விட அதி தீவிர வீரியத்தோடு, பரவி வரும் விடயம் தொடர்பாக பல்வேறு சந்தர்பங்களில் விழிப்புணர்வு அறிவித்தல்கள் உரிய தரப்பினர்களாலும் வழங்கப்பட்ட போதும், மேற்குறித்த விடயம் தொடர்பாக இரவு பகலாக குறித்த தரப்பினர் பல்வேறு தியாகங்களுடன் அர்ப்பணிப்பான சேவைகளை வழங்கி குறித்த தொற்றிலிருந்து எமது பிரதேச மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும், குறித்த அறிவவுறுத்தல்களை எமது பிரதேச மக்கள் முற்று முழுதாக புறக்கணித்த விளைவினாலும், உரிய தருணத்தில் சுகாதாரத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையினரின் அவ்வப்போது வழங்கப்பட்ட வழிகாட்டல்களை பின்பற்றி குறித்த தரப்பினர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்காததன் காரணமாகவும், எமதூர் பாரிய அழிவினை நோக்கி பயணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதை உணரக் கூடியதாக இருப்பதோடு, எதிர்வரும் காலங்களில் இந்நோய்த்தொற்று பாரியளவில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் சுகாதாரத்துறையினர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினத்திலிருந்து (27) எதிர்வரும் 2021.01.10ஆம் திகதி வரை எமது பிரதேசத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதோ அல்லது வெளி மாவட்டங்களிலிருந்து எமதூரை நோக்கி பயணம் மேற் கொள்வதோ எமது ஊர் மக்களின் நன்மை கருதி தடை செய்யப்படுகின்றது.
பொது மக்கள் தங்களையும், பிற மக்களையும் ஆரம்ப காலப்பகுதி முதல் குறித்த தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அறிவுறுத்தப்பட்டு வரும் சமூக இடைவெளி, முகக்கவசம் மற்றும் கைகழுவதல் போன்ற சுகாதார பழக்கவழக்கங்களை அன்றாட வாழ்வில் எச்சந்தர்பத்திலும் கைவிடாது பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறும் வினயமாகவும் கண்டிப்பாகவும் கேட்டுக் கொள்கின்றோம்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் உரிய தரப்பினர் பூரண ஒத்துழைப்பு வழங்காதவிடத்து பாதுகாப்பு தரப்பினர்களால் குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப்படுவதோடு, அன்டிஜன் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்ற தகவலையும் மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தலைவர் தெரிவித்துள்ளார்.
