காத்தான்குடி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் முடக்கம் நீடிக்கும் - மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு

(எம்.பஹ்த் ஜுனைட்)
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்க்குட்பட்ட காத்தான்குடியில் கடந்த சுமார் 16 நாட்களாக முடக்கப்பட்டுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் 8 பிரிவுகளின் முடக்க நிலைமையை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர். ஏ.லதாகரன் தெரிவித்தார்.
இது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (18) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையிலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களின் மேற்பார்வையிளும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி விடயங்கள் தொடர்பில் சுகாதார பிரிவினர்,போலிசார், இரானுவம்,பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவில் 10 கிராம சேவகர் பிரிவை தொடர்ந்து தனிமைப் படுத்த ஆலோசனை வழங்கப்பட்டதுடன் இது தொடர்பான எல்லைகளை அடையாளப்படுத்தும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு இவை தொடர்பான பரிந்துரைகளை சுகாதார பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் அறிவித்தலை கொண்டு உரிய கிராமசேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் முடக்க நிலைமை தளர்த்தப்படும் பிரதேசங்கள் தொடர்பில் தேசிய கொவிட் தடுப்பு செயலணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை அனைத்து பகுதிகளுக்கும் தொடர்ந்து முடக்க நிலை இருக்கும் எனவும் சில நேரம் முடக்கப்படும் கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிவித்த அவர் விடுவிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் இறுக்கமான சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
Reviewed by Editor
on
January 18, 2021
Rating: