இள வயதில் உருவாகும் சூலககட்டிகள்!!!

 


சூலகங்கள் பெண்களில் மாதந்தோறும் கரு முட்டையை உருவாக்கும் , பெண்களுக்கான   ஹோர்மோன்களை உற்பத்தியாக்கும் இனப்பெருக்க உறுப்பாகும். கருமுட்டை சாதாரணமாக இரண்டு தொடக்கம் மூன்று  சென்ரி மீட்டர் வரை பெரிதாக உருவாகும்.

சூலக கட்டிகள் பொதுவாக காணப்படும் ஒரு நோயாகும். வயிற்றினுள் அல்லது சூலகத்தில் கட்டிகள் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்ட உடனே அநேகமானவர்கள் அது புற்று நோயாக இருக்குமோ அல்லது பெரிய ஆபத்தான நோய் நிலைமையாக இருக்குமோ என்று  பயப்படுவார்கள். எனினும்  குறிப்பாக மாதவிடாய் நிறுத்தம் நடைபெறுவதற்கு முன் ஏற்படும் அநேகமான  கட்டிகள் ஆபத்தானவை அல்ல. சூலக கட்டிகள் பல்வேறு விதமாக உருவாகலாம். அவைகளாவன,

1. Simple Cyst

இக் கட்டிகளில் அநேகமாக நீர் போன்ற திரவங்களே காணப்படும், இவை கருமுட்டை வெளியான இடத்தில் நீர் சேர்வதால் உருவாகும் நீர்க்கட்டிகளாகும். இவ்வாறு உருவாகும் சிறிய கட்டிகள் சில மாதங்களில் இயற்கையாகவே மறையும் வாய்ப்பு அதிகம்.

2. Chocolate cyst/ Endometrioma

சில பெண்களில் கர்ப்பப்பையின் உட்சுவரில் காணப்படக்கூடிய கலங்கள் கர்ப்பப்பைக்கு வெளியே காணப்படலாம். அவை சூலகங்களினுல் காணப்படும் பொழுது மாதம்தோறும் சிறிது சிறிதாக இரத்தக்கசிவு சூலகத்தில் ஏற்பட்டு அவை சூலக கட்டிகளை உருவாக்கக்கூடிய நிலைமையாகும். இவை பொதுவாக மாதவிடாய் ஏற்படும் பொழுதும் அதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னிருந்து உருவாகும் கடினமான வயிற்று வலியை உருவாக்கக் கூடியவை. இவ்வாறான கட்டிகள் நோய் அறிகுறிகளை ஏற்படுத்தும்போது அவற்றை அகற்றுவதே இதற்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.

அநேகமான சூலக கட்டிகள் வெவ்வேறு காரணங்களுக்காக ஸ்கேன் பரிசோதனைகள் செய்யும் பொழுது நோய் அறிகுறிகள் எதுவுமின்றி எதேற்சையாக  கண்டறியப்படலாம் அல்லது பின்வரும் நோய் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.


1.  வயிற்று வலி குறிப்பாக அடிவயிற்றில் ஏற்படும் வலி

2. மாதவிடாய் ஏற்படும் பொழுது அதிகளவு வயிற்று வலி

3. மாதவிடாய் மாதம்தோறும் சரியாக உருவாகாமல் அதனில் புதிதாக மாற்றங்கள் ஏற்படுதல்

4. உடலுறவு கொள்ளும் பொழுது அதிகளவு வலி ஏற்படுதல் 

5. வயிறு வீங்கிக் காணப்படுதல்

6.  அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை உருவாகுதல்

7. கர்ப்பம் தரித்தலில் தாமதம் ஏற்படுதல்

இவ்வாறான சூலக கட்டிகள் கண்டறியப்பட்ட பின்னர் அதன் சிகிச்சை பல்வேறு விதமாக மேற்கொள்ளப்படும்.

சிறிய சூலக கட்டிகளையும் அகற்றத் தேவையில்லை. அது ஸ்கேன் பரிசோதனையில் சாதாரண சிறிய நீர்க் கட்டிகளாக கண்டறியப்பட்டால் மீண்டும் சில மாதங்களின் பின்னர் பரிசோதித்து பார்க்கலாம். அவை அநேகமாக மறையக் கூடியவை.

சில கட்டிகள் அதிக அசௌகரியங்களை ஏற்படும்பொழுது அல்லது கட்டி பெரிதாக உள்ள சந்தர்ப்பங்களிலும் மற்றும் கட்டியின் உள்ளே இரத்தக் கசிவு அல்லது தின்மமான அமைப்புகள் இருக்கும் பொழுது அவற்றை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுதல் அவசியமாகும்.

பெரும்பாலான  சூலக கட்டிகளை கேமரா Laparoscopy மூலம் சத்திரசிகிச்சை மேற்கொண்டு அகற்றலாம்.  இதன் பொழுது வயிற்றினுள் சிறு வெட்டு மூலம் சத்திரசிகிச்சை உபகரணங்களை செலுத்தி கட்டி அகற்றப்படும் இதுவே இதற்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.

மிகப்பெரிய கட்டிகள் அல்லது கட்டியில் கடினமான பதார்த்தங்கள் காணப்படும் பொழுது அல்லது புற்றுநோயாக  இருக்குமோ என்ற சந்தேகத்துக்குரிய கட்டிகளையே வழமையான வயிற்றை வெட்டி செய்யக்கூடிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும்.

மேலும் அனேகமான சந்தர்ப்பங்களில் கட்டி மாத்திரமே அகற்றப்படும். சூலகங்களை பழைய நிலைமை போன்று மீள் வடிவமைக்கப்படும்.

சந்தேகத்துக்குரிய கட்டிகளை அல்லது மிகப்பெரிய கட்டிகளை அகற்றும் பொழுது  சூலகங்களை மீள்வடிவமைக்க முடியாத நிலைகளிலேயே சூலகம் அகற்றப்படும்.

சூலக கட்டிகள் கண்டறியப்பட்ட பின்னர் அதற்காக சத்திரசிகிச்சை வரை உள்ள காலத்தில் அல்லது அடுத்த ஸ்கேன் பரிசோதனை வரை உள்ள காலத்தில் கடினமான திடீரென்று ஏற்படக்கூடிய வயிற்று வலிகள் ஏற்பட்டால் விரைவில் வைத்தியசாலையை நாட வேண்டும்.

ஏனென்றால் சிலரில் அந்தக் கட்சியினுள் திடீரென்று இரத்தக்கசிவுகளோ அல்லது அதன் இரத்த ஓட்டம் தடை படக்கூடிய நிலைமைகளோ ஏற்படலாம். அவ்வாறான நிலைமைகளில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம்.

சில சந்தர்ப்பங்களில் கர்ப்ப காலத்திலும் சூலக கட்டிகள் கண்டறியலாம். அநேகமான கட்டிகளை கர்ப்ப காலத்தில் அகற்றத் தேவையில்லை. எனினும் மிகப்பெரிய கட்டிகளை அல்லது சந்தேகத்துக்கிடமான கட்டிகளை அகற்ற வேண்டும். 

சுருக்கமாகக் கூறினால் இளம் பெண்களில் சூலக கட்டிகள் பொதுவாக காணப்படும் ஒரு நோய் நிலைமையாகும். பெரும்பாலான  கட்டிகள் ஆபத்தானவையல்ல. மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன் சூலகங்களில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிக அரிது. சிறிய நோய் அறிகுறிகளை ஏற்படுத்தாத நீர்க்கட்டிகளை  அகற்றத் தேவையில்லை. சத்திரசிகிச்சை செய்யவேண்டிய கட்டிகளை கேமரா மூலம் பார்த்து செய்யும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவதே இதற்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.




டாக்டர் ஏ.சீ.எம்.முஸ்தாக் (MBBS. MD. MRCOG)
மகப்பேறு மற்றும் பெண்நோயியல் நிபுணர்
ஆதார வைத்தியசாலை
சம்மாந்துறை.



இள வயதில் உருவாகும் சூலககட்டிகள்!!! இள வயதில் உருவாகும் சூலககட்டிகள்!!! Reviewed by Editor on January 24, 2021 Rating: 5