ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி!!!

 


தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக தைத்திருநாள் அமைய பிரார்த்திக்கின்றேன் என்று அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான ஒரு கலாச்சார பண்டிகையாகும். இந்த பண்டிகையானது இயற்கையுடன் பிணைந்த, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட  பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பயிர்களுக்கு வளம் சேர்த்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதையும் குறிக்கிறது.

தமிழ் மக்கள், தைத்திருநாளை, தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஒரு புதிய ஆண்டின் விடியலாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எமது நாட்டின் சகோதர தமிழ் மக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இன்று இணைந்து கொள்கிறேன்.

விளைச்சலின் மூலம் கிடைத்து அறுவடை செய்த புத்தரிசியைப் பாலுடன் சேர்த்து பொங்க வைத்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், முழு உலகிற்கும் சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று தமிழர்கள் பிரார்த்திக்கின்றனர்.

இன, மத, மொழி பேதமின்றி - இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவதே என்னுடையதும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும்.

இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான வழிவகைகள் எமது அரசாங்கத்தின், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் ஒரு தனித்துவமான பண்பாகும். அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு நன்றியோடு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகையானது - பண்டைய காலத்திலம் தொட்டே நம் சமூகம் மதித்து வரும் ஓர் உயரிய விழுமியத்தைக் குறிக்கிறது.

இதன் காரணமாக, தைப்பொங்கல் பண்டிகையானது, எமது நாட்டின் தேசிய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே ஆகியுள்ளது. மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில்  தைப்பொங்கல் திருநாளை இன்று  கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி!!! ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி!!! Reviewed by Editor on January 14, 2021 Rating: 5