(Dr.Aqil Ahmad Sharifuddeen)
இனவாதத்தை முதலீடாக்கியே இந்த அரசு அதிகாரத்துக்கு வந்தது என்பது பரவலாகச் சொல்லப்படும் கருத்து.
ஒரு அரசு என்கின்ற தோரணையில் நாட்டின் மேம்பாட்டுக்கும், கௌரவத்துக்குமாக செயலாற்றுவதிலும் பார்க்க அனைத்தையும் குட்டிச் சுவராக்கும் கருமமாகவே அரசு செயற்படுவதாக பல கோணங்களிலிருந்தும் விமர்சனக் கணைகள் வீசப்படுவதனை ஊடகங்கள் வாயிலாக நாம் காண்கின்றோம்.
அது இந்த அரசை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக உழைத்த மக்களிலிருந்தே வெளிப்படத் தொடங்கியுள்ளது. 'ස ෆේල්' எனும் கோஷம் அம்மக்களிடம் இருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் ஒன்று நடாத்தப்படும் பட்சத்தில் இது ஆணித்தரமாகப் பதிவு செய்யப்பட்டுவிடும் எனும் அச்சத்தில் புலனாய்வு அறிக்கைகளுக்கு அமைவாகவே மாகாண சபைத் தேர்தல் காலவரையின்றி பின்போடப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.
தாம் கட்டமைத்த தமக்கேயான நாயகத்துவ பிரபல்யத்தில் ஏற்பட்டுவரும் சேதாரங்களை ஆரம்பம் முதலே நுகர்ந்து கொண்ட அரசு அதனைத் தக்க வைத்துக் கொள்ள அதே இனவாதத்தையே கருவியாக்கி வந்துள்ளது என்பது விமர்சகர்களின் அவதானமாகும்.
அந்தத் தொடரின் தற்கால season தான் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கும் பெருந்தொற்றில் மரணிப்பவர்களின் உடலங்களின் கட்டாய எரிப்பு.
இந்த season ஐ இறுமாப்புடன் தொடங்கியவர்கள் இன்று மூக்குடைந்து நிற்கின்றார்கள். இத்தீர்மானம் அரசியல் ரீதியானது அல்ல மாறாக அறிவியல் ரீதியானதே என சப்பை கட்டியவர்கள் உங்களது தீர்மானத்துக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லை என வெள்ளிடை மலையாக நிரூபிக்கப்பட்டபோது உடைந்த மூக்கிலிருந்து வழியும் இரத்தத்தை மறைக்கத் திணறுகின்றார்கள்.
கட்டாய எரிப்பை 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் கோசத்தை உயர்த்தி ஒலித்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் அனுசரணைப்படுத்தப்பட்ட இனவாதிகளுக்கும், அறிவியல் அறிஞர்களின் தர்க்க ரீதியான வெளிப்படையான விளக்கங்களுக்கும் மத்தியில் அலைந்து கொண்டிருக்கின்றது பெரும்பான்மை பொதுச் சமூகம். அங்கே அரசின் சாயம் வெழுக்கத் தொடங்கியுள்ளது.
மறுபக்கம் நாட்டின் இனச் சிறுபான்மையினரான தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் மற்றொரு சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மறுக்கப்படும் உரிமைகள் தொடர்பாக காட்டுகின்ற அக்கறை அரசைக் கலங்க வைத்திருக்கின்தாகவே தெரிகிறது. அவர்களது வாதங்களும் வினாக்களும் முஸ்லிம்கள் மத்தியில் தாம் வாக்களித்துத் தெரிவு செய்த பிரநிதிகளையே புறந்தள்ளும் அளவுக்கு நம்பிக்கைக் கீற்றுகளைப் பாய்ச்சியிருக்கின்றன.
குறித்த கட்டாயத் தகன விவகாரம் எப்படி 'சம்பிரதாய முஸ்லிம்கள்' மற்றும் 'அடிப்படைவாத முஸ்லிம்கள்' ஆகிய கூறுகளை ஒன்றிணைத்து விடுமோ என ஞானசாரர் அஞ்சுவதைப்போலவே இதே விவகாரம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஓரணியில் இணைத்து விடுமோ என்று அவர்கள் அச்சப்படுகின்றார்கள் எனத் தெரிகின்றது.
இத்தகைய பின்னணியிலேயே யாழ் பல்கலை நினைவேந்தல் தூபித் தகர்ப்பு புரிந்து கொள்ளப்பட்ட வேண்டும்.
தமிழர் விடுதலைப் போராட்டம் பெரும்பான்மையினர் மத்தியில் பாரிய வடுக்களையும் வைராக்கியத்தையும் ஏற்படுத்தியது என்பது அறிந்ததே. அவர்களது முப்பது வருட ரணத்துக்கு முத்தாய்ப்பு வைத்த ஒரு நிகழ்வாகவே இறுதிப் போரும், முள்ளிவாய்க்கால் சம்பவங்களும் அமைந்தன. இந்நிகழ்வு தமிழர் சமூகத்தில் மிகப்பெரும் மனித அவலமாக அனுஷ்ட்டிக்கப்பட்ட போதும் பெரும்பான்மைச் சமூகத்தில் அது கொண்டாடப்படும் வெற்றி விழாவாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனைச் சொல்லிச் சொல்லியே தமக்கான நாயகத்துவப் பிரபல்யத்தை அவர்கள் கட்டமைத்தார்கள். அதனைக் கொண்டே தேர்தல் வெற்றிகளையும் அடைந்து வந்தார்கள்.
நாடு மாகாண சபைத் தேர்தலை எதிர்நோக்கி இருந்த சமயத்தில் அரச எந்திரக் கோளாறுகளினால் தமது வெற்றி கேள்விக்குறியாகி இருக்கும் சூழமைவுகள் காரணமாக தேர்தலைப் பின்போட்டவர்கள் மீண்டும் நாயகத்துவப் பிரபல்யத்தை தூக்கி நிறுத்த ஆரம்பித்திருக்கும் season தான் நினைவேந்தல் தூபி தகர்ப்பு.
இந்தத் தகர்ப்பு மூலம் பெரும்பான்மை சமூகத்தை நோக்கி நேரடியாகவே ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார்கள். நாமே இந்த தேசத்தைப் பிளவிலிருந்து இரட்சித்த இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதே அந்தச் செய்தி. பல்வேறு காரணங்களினால் மாசு மண்டிய தங்களது பிரதிமையை துடைத்துக் காட்டும் ஒரு முயற்சியே இது.
அடுத்தது என்ன?
தமிழர் பொதுச் சமூகத்திலிருந்து தூபி தகர்ப்புக்காக வகையறா எதிர் வினைகள் எழும். நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் குரல் கொடுப்பர். புலம்பெயர் தமிழ் மக்கள் அமைப்புக்கள் கிளர்ந்தெழும்.
முஸ்லிம்களின் சமய உரிமைக்காக தமிழர் பிரதிநிதிகள் குரல் கொடுத்து வருவது தொடர்பில் 'தமிழர்கள் அவதிக்குள்ளான போது முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுக்கவில்லையே' எனும் முரண் மனோநிலை தமிழர் சமூகத்தில் இளையோடிக் கொண்டிருப்பதும் அவதானிக்கப்படுகின்றது. இதற்கு செவ்வி ஒன்றில் பதிலளித்த திரு சுமந்திரன் அவர்கள் 'அவர்கள் செய்தது தவறு என்றால் அந்தத் தவறையே நாங்களும் செய்வதா?' எனக் கருத்துரைத்தார்.
நாளை நாடாளுமன்றில் தமிழர் பிரதிநிதிகள் தூபி தகர்ப்புக்கு எதிராக குரல் எழுப்பும் போது அவர்களுக்கு பக்கபலமாகச் செயற்பட வேண்டிய தார்மீகக் கடப்பாட்டில் முஸ்லிம் பிரதிநிதிகள் மாட்டிக் கொண்டுள்ளார்கள்.
தமது சமூகம் அவதிக்குள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் போதே எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் இருபதுக்கு ஆதரவு தந்தவர்களிடம், தமது சமூகத்தின் சமயம்சார் உரிமையைப் பெற்றெடுக்க தர்க்கபூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பேச முடியாதவர்களிடம் இவ்வெதிர்பார்ப்பு மிகையானதுதான்.
தமது இயல்பான சோரம் போன சோம்பேறித் தனத்தின் காரணமாக முஸ்லிம் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் குரல் கொடுக்காமல் போவார்களானால் தமிழர் பொதுச் சமூகத்தில் அது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. இதனால் தமிழ்த் தலைவர்களின் முஸ்லிம்களுக்கான குரலில் தொய்வு ஏற்படலாம்.
பேரினவாதிகள் எதிர்பார்ப்பதுவும் இதனைத்தான். இனச் சிறுபான்மையினர் ஓரணியில் திரழ்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை, பார்த்துக் கொண்டு வாழாவிருக்கப் போவதுமில்லை.
மறு பக்கம் முஸ்லிம் பொதுச் சமூகம். தமிழர் விடுதலைப் போராட்டத்தின் யுக்திப் பிசகலுக்கு முஸ்லிம் சமூகம் கணிசமான விலையைக் கொடுத்திருக்கிறது. தமது இனத்துக்காகப் போராடியவர்கள் தம்மை அண்டி வாழும் இன்னொரு இனத்தின் மீது நடத்திய வரம்பு மீறல்கள் நியாயப்படுத்த முடியாதவை. அது கடந்த காலம். என்றாலும், தமிழர் ஆயுதப் போராட்டத்தினால் பல வழிகளிலும் ரணங்களைச் சுமந்தவர்கள் எனும் வகையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டதில் முஸ்லிம்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட வேண்டிய யதார்த்தமே.
தம்மீது மிலேச்சத் தனங்களைக் கட்டவிழ்த்துவிட்ட ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப் பட்டதில் முஸ்லிம் பொதுச் சமூகம் நிம்மதி கண்டாலும் தமிழர்களின் நியாயங்கள் நிராகரிக்கப்படுவதை அவர்கள் சரிகாணவில்லை. ஏனெனில் தமிழர் முஸ்லிம்களின் தாய்மொழிச் சகோதரர்கள். இதனை ஆயுதப் போராட்டக் குழுக்கள் உணர்ந்து கொள்ளவே இல்லை. இதுவே முஸ்லிம்களை தனிக்குடித்தனம் பற்றிச் செயலாற்றச் செய்தது.
தகர்க்கப் பட்ட தூபி தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் போதிய அவதானம் இல்லை என்பதே உண்மை. இது தம்மீது அநீதி இழைத்த ஆயுததாரிகளுக்கானதா அல்லது அநியாயப் படுத்தப்பட்ட பொதுமக்களுக்கானதா என்பதில் அங்கே தெளிவில்லை. ஆன காரணத்தால் அங்கிருந்து தூபி தகர்ப்புக்கு எதிரான குரல்கள் பலமாக ஒலிக்காது என்பதே நிதர்சனம்.
இவற்றின் காரணமாக பழையதிலிருந்து கற்றுக் கொண்டு இரு இனச் சிறுபான்மையும் தோழ் கொடுத்துப் பயணிக்கலாம் எனும் நம்பிக்கை துளிர்விடும் தறுவாயில் நினைவேந்தல் தூபி தகர்க்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் சமய உரிமைக்காக தமிழர்கள் குரல் கொடுப்பதைப் போன்று தமிழர்களின் உணர்வுகளின் மீது நடாத்தப்பட்ட இந்த அத்துமீறலுக்காக கணிசமான அளவு குரல் கொடா நிலைமைக்குள் முஸ்லிம் பொதுச் சமூகமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் சிக்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்கள் பேசாவிட்டால் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இடையே சந்தர்ப்பவாத விதைகள் தூவப்படும்.
அபூர்வமாக முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் குரல் கொடுத்துவிட்டாலோ அல்லது முஸ்லிம் பொதுச் சமூகம் பேசினாலோ அது பேரினவாதிகளுக்கு துருப்புக் கிடைத்ததாகிவிடும்.
அதோ அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்று ஓலமிடுவார்கள். இவை அனைத்தையும் கொண்டு தேச பக்தி Horor movie ஒன்று பெரும்பான்மையின மக்களுக்காக ஓட்டப்படும். மக்கள் அபிமானம் திரட்டப்படும்...
நாட்டின் பொருளாதாரம், இறைமை ஆகியவற்றுக்கு ஏற்பட்டிருக்கும் சவால்கள் கவனக் கலைப்புச் செய்யப்படும்.
எதிர்பார்க்கப்படும் ஜெனீவா பின்னடைவுகள் பெரும்பான்மை மக்களுக்கு மழுங்கடிக்கப்படும்.
சரிந்துவரும் நாயக பிரபல்யம் அடுத்த தேர்தலுக்காக தூக்கி நிறுத்தப்படும்.
தேசத்தை நிஜமாகவே நேசிக்கும் அனைத்து இன, சமூக மக்களும் சூழ்ச்சிகளின் சூட்சுமங்களை கவனமாகக் கண்டறிந்து கருமமாற்றுவது வேண்டப்படுகின்றது.
நமது தேசமே நமது அடையாளம்.
