
திரு. ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை நேற்று (19) பாராளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி திரு.சுமந்திரன் அவர்கள் தெரிவித்தார்கள்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திரு.ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் குறித்த வழக்கில் தாமே அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி என்பதை தெரியப்படுத்தியதோடு நேர்மையானதொரு அரசியல்வாதியின் சார்பில் தாம் அவ்வழக்கினை முன்னெடுத்ததில் பெருமையடைவதாயும் தெரிவித்திருந்தார்.
துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு என்பதை தெரிவித்திருந்தார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சட்டங்கள் இயற்றப்படாத காரணத்தினால் பாராளுமன்றம் இதற்கு பொறுப்பு கூற வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
நீண்ட காலமாக இவ்வாறான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய தேவையிருந்தும், பொதுநல நோக்கோடு அநேக வரைபுகள் வரையப்பட்டும் சட்டங்கள் இயற்றப்படவில்லை. எனவே காட்டுக்கழுதைக்கு கிடைத்த சுதந்திரம் போல எவரும் எதனையும் தீர்ப்பளிக்க கூடியதொரு சூழ்நிலை காணப்படுவதின் பாரதூர தன்மையினையும் விளக்கினார். மேலும் உள்ளூர் சட்டங்கள் இயற்றப்படாத நிலையில் ஆங்கில சட்டமே நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதாலும், ஆங்கில சட்டத்தில் இப்படியான கூற்றுக்கள் நீதிமன்ற அவதூறாக கணிக்கப்படுவதில்லை என்பதனை கருத்தில் கொள்ளாது, குறித்த தீர்ப்பினை அளித்தது தவறானதொரு போக்கு என்பதே தமது நிலைப்பாடு என்பதனையும் தெரிவித்தார்.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடமானது நேர்மையானதொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அசாதாரணமுறையில் அநீதி இழைக்கப்பட வழி வகுத்துள்ளது என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
