பிள்ளையான் எம்.பி தலைமையில் அவசர கூட்டம்!!!

(குகதர்ஷன்)

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளும், சமூகமட்ட அமைப்புக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கேட்டுக் கொண்டார்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்த நிலையில் அவசர கலந்துரையாடல் வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(25) மாலை இடம்பெற்ற போதே இதனை அவர் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை பதில் தவிசாளர் எம்.யசோதரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரீ.ஸ்டீப் சஞ்ஜீவ், கல்குடா பொலிஸ் அதிகாரி, அரச உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்பின் பிரிதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இருபத்தைந்தாம் திகதி வரை 354 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும், குறிப்பாக நான்கு கிராம அதிகாரி பிரிவில் அதிகரித்து காணப்படுகின்றது. அந்த வகையில் உடனடியாக பேத்தாழை, கண்ணகிபுரம் ஆகிய கிராம அதிகாரி பிரிவில் நாளை செவ்வாய்க்கிழமை துப்பரவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அத்தோடு ஏனைய கிராம அதிகாரி பிரிவுகளில் துப்பரவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தீர்மானம் எடுக்கப்பட்டது. குறிப்பாக வீட்டுச் சூழலை துப்பரவு இல்லாமல் வைத்திருப்பவர்களுக்கு எதிராகவும், வெற்றுக் காணிகளை துப்பரவு இல்லாமல் வைத்திருபவர்களுக்கு எதிராகவும் உடனடியாக வழக்கு தாக்கம் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தனினால் பணிப்புரை வழங்கப்பட்டது.


பிள்ளையான் எம்.பி தலைமையில் அவசர கூட்டம்!!! பிள்ளையான் எம்.பி தலைமையில் அவசர கூட்டம்!!! Reviewed by Editor on January 26, 2021 Rating: 5