மார்ச் முதலாம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக பத்து நாட்கள் க.பொ.த (சா/த) பரீட்சை நடைபெற இருப்பதால் பரீட்சை எழுதும் மாணவர்களை டெங்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து பரீட்சையை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கும் நோக்கில் கல்முனை சுகாதார பிராந்தியத்தில் டெங்கு ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பரீட்சை நிலையமாக அமையவிருக்கும் பாடசாலைகளின் சூழலில் காணப்படும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பூச்சியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சிரேஷ்ட சுகாதார பூச்சியல் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
அந்த ஆய்வின் பிரகாரம் 85% ஆன பாடசாலைகளின் சூழலில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் ஏனைய பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களும் அடையாளம் காணப்பட்டன.
பரீட்சை எழுதும் மாணவர்களை டெங்கு நோய் ஆபத்திலிருந்து பாதுகாப்பது பரீட்சை நிலையங்கள் அமைந்திருக்கும் குறிப்பிட்ட பாடசாலைகளின் நிருவாகத்தின் பொறுப்பும் கடமையுமாகும்.
எனவே, பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன் அவசரமாக பின்வரும் நடவடிக்கைகளை செய்து முடிக்குமாறு அந்த உத்தியோகத்தர் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
1) அனைத்து மலசல கூடங்களினதும் Squatting pans களின் மேல் மண் அடைக்கப்பட்ட பைகளை வைத்தல்.
2) பாடசாலை சுற்றாடலில் காணப்படும் நீர் தேங்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், டின்கள், சுரட்டைகள், பொலித்தின் பைகள் போன்றவற்றை தேடி சேகரித்து மண்ணில் புதைத்துவிடல் அல்லது உள்ளுராட்சி சபை குப்பை சேகரிக்கும் வாகனங்களில் ஒப்படைத்தல்.
3) பூச்சாடிகளில் நீர் தேங்கி நிற்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
4) பிளாஸ்டிக் நீர் தாங்கிகளின் மேலதிக நீர் வெளியேறும் குழாய்களின் துளைகளை மெல்லிய துணிகளால் கட்டிவிடுதல்.
5) கிணறுகளை நுளம்பு உட் செல்ல முடியாதவாறு வளையால் மூடிக்கட்டுதல்.
6) கூரைப் பீலிகளை மழை நீர் தேங்கி நிற்க முடியாதவாறு சீர் செய்தல். அல்லது அகற்றிவிடுதல்.
7) உடைந்த தளபாடங்களை மழை நீர் சேராதவன்னம் பாதுகாப்பான இடங்களில் வைத்தல், ஆகிய விடயங்களை அனைவரும் கவனத்தில் கொண்டு எம்மையும் எம் எதிர்கால சந்ததியினர்களையும் பயங்கரமான உயிர்க்கொல்லியான டெங்கில் இருந்து பாதுகாக்க முயற்சி செய்வோம்.
Reviewed by Editor
on
February 26, 2021
Rating:
