ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றிருக்க வேண்டியவர் தாஹா செய்னுதீன் - ரவூப் ஹக்கீம் எம்.பி


கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சட்டத்துறைக்கு சுமார் ஐம்பது வருடங்களாக பங்களிப்புச் செய்தவருமான சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெறாமல்போனது வேதனைக்குரிய விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் மற்றும் முக்கிய சட்ட ஜாம்பவான்கள் பெருமிதமாக சிலாகித்துப் பேசுமளவுக்கு சட்டத்துறையில் முக்கியமானதொரு புள்ளியாக திகழ்ந்துவந்த தாஹா செய்னுதீனின் மறைவு, சட்டத்துறையில் பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்திச் சென்றுள்ளது.  

இவர் எப்பொழுதோ ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றிருக்க வேண்டியவர். ஆனால், துரதிஷ்டவசமாக விண்ணப்பித்து, அதிலிருந்து தெரிவுகள் இடம்பெறுவதால் இப்படியான தலைசிறந்த பலருக்கு அந்த அந்தஸ்து கிடைப்பதில்லை. சேவையில் மூத்த பலர் தலைசிறந்த சட்டத்தரணிகளாக இருந்தும், விண்ணப்பம் மூலம் கிடைக்கின்ற இந்த நியதியை விரும்புவதில்லை.

டொக்டர் கொல்வின் டி சில்வா, ராஜகுணசேகர, எஸ்.எல். குணசேகர போன்ற பிரபல சட்டத்தரணிகள் சட்டத்துறையில் பிரகாசித்து விளங்கியபோதும், ஜனாதிபதி சட்டத்தரணிக்கான அங்கீகாரம் கடைக்காமல்போன பல சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் என்பது, விண்ணப்பங்களிலிருந்து வெறும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவரினால் வழங்கப்படுவதைவிட, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிபாரிசின் பேரில், பிராந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் அனுசரணையுடன் உயர் நீதிமன்ற அங்கீகாரத்தினால் கிடைக்குமாயின் திறமையுள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் அந்த அங்கீகாரம் போய்ச்சேரும்.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் திறமையான மூத்த சட்டத்தரணியாக திகழ்ந்த தாஹா செய்னுதீனுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி அங்கீகாரம் கிடைக்காமல் போனமையானது, மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். அவருக்கான உரிய அந்தஸ்து மறு உலகில் கிடைக்கவேண்டும்.

அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை எல்லாம் வல்ல இறைவன் கொடுக்கவேண்டும். அத்துடன் அன்னாரின் பாவங்களை மன்னித்து, நன்மைகளை அங்கீகரித்து மறுமை நாளில் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்கவேண்டுமென பிரார்த்திக்கிறேன் என்று தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றிருக்க வேண்டியவர் தாஹா செய்னுதீன் - ரவூப் ஹக்கீம் எம்.பி ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றிருக்க வேண்டியவர் தாஹா செய்னுதீன்  - ரவூப் ஹக்கீம் எம்.பி Reviewed by Editor on February 06, 2021 Rating: 5