களத்தில் நின்று சேவையாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டும் கெளரவிப்பும்!!!



(ஐ.எல். றிஸான், றிஸ்வான் சாலிஹூ)

அம்பாறை மாவட்டத்தில் கோவிட் -19 வைரஸ் தொற்று இரண்டாவது அலை நிலைமைகளின் போது அர்ப்பணிப்புடன் களத்தில் பணியாற்றிய இலங்கை இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நிந்தவூர் அட்டப்பள்ளம் 'ஹால்ப் மூன்' மண்டபத்தில் அம்பாறை மாவட்ட சிவில் சமூகத்தின் தலைவரும், நிந்தவூர் ஆயர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் நடைபெற்றது.



அம்பாறை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்று சமூகப் பரவலாகாது, அவசர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தின் 24வது படைப்பிரிவு கட்டளைத் தளபதி, கோவிட் 19 அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் ரீ.டீ.வீரக்கோனின் அர்ப்பணிப்புப் பணியைப் பாராட்டி கௌரவிப்பதாகவும், அம்பாறை மாவட்டத்தில் தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து, பதவி உயர்வு பெற்று கொழும்பு செல்வதற்கான பிரிவுபசார நிகழ்வாகவும் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இந்நிகழ்வில், கோவிட் 19 கட்டுப்பாட்டுக்கு தங்களை அர்ப்பணித்த இலங்கை இராணுவத்தின் 24வது படைப்பிரிவு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரீ.டீ.வீரக்கோன், அக்கரைப்பற்று இராணுவ முகாம் 241வது படைப்பிரிவு கட்டளையதிகாரி கேர்ணல் ஜானக விமலரத்ன, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர், முன்னாள் அக்கரைப்பற்று பிரதி சுகாதார வைத்திய அதிகாரியும், தற்போதைய நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் ஏ.எம்.ஏ.காதர் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


அத்துடன், சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீனின் நீண்டகால ஊடகப் பணியைப் பாராட்டியும், நிந்தவூர் ஆயர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மாவட்ட மக்களுக்கு 'சுவதரணி' ஆயர்வேத நோய் எதிர்ப்பு பொதிகளை வழங்கியமையைப் பாராட்டியும், ஓய்வுநிலை அதிபர் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளன செயலாளர் எம்.பீ.ஏ.ஹமீட் தனது சேவையை நிறைவு செய்வதனையொட்டியும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

நிகழ்வில் உரையாற்றிய, இலங்கை இராணுவத்தின் 24வது படைப்பிரிவு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரீ.டீ.வீரக்கோன் கூறுகையில்,

அரச அதிகாரிகள் என்ற வகையில் எமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றினோம். சுகாதாரத் துறையினர், பொலிஸ், சமூகப் பிரதிநிதிகளின் அர்ப்பணிப்பு, பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பனவற்றின் மூலம் கொவிட் 19 மேலும் பரவாது தடுக்க முடிந்தது. இவ்வாறான ஒத்துழைப்பினை தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினருக்கும், ஏனைய துறைசார் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில், அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லாஹ் அகமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாசிக், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் எச்.சீ.எம்.லாபீர், அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவரும், அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.ஜூனைதீன், அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை ஆலோசகர் யூ.எம்.வாஹித், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஏ.கபூர், அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ், அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கணக்காளர் எம்.ஏ.ஜகி, அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.எம்.ஆகிர் உள்ளிட்ட அம்பாறை மாவட்ட சிவில் சமூகம் அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

களத்தில் நின்று சேவையாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டும் கெளரவிப்பும்!!! களத்தில் நின்று சேவையாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டும் கெளரவிப்பும்!!! Reviewed by Editor on February 08, 2021 Rating: 5