திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் ஹெலசுவய நிறுவனத்தின் இணைப்பாளர் தேவரஜனி ஒருங்கிணைப்பின் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
இதன்போது அதிதிகளுக்கு மாலை அணிவித்து பாரம்பரிய முறையில் பாரம்பரிய இசைக்கருவி வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு இந்து கிருஸ்தவ மத அனுஷ்டானங்களுடன் நெல் அறுவடை விழா ஆரம்பமானதுடன் நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையிலான நெற்செய்கை தொடர்பில் மாணவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து விநாயகபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ஸ்ரீ ஆறுமுக கிருபாககர சர்மாவினால் சூரிய பகவானுக்கு பூஜைகள் இடம்பெற்றதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஹெலசுவய நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் வி.கே.சேனநாயக்க ஆகியோரால் சம்பிரதாய ரீதியாக நெல் அறுவடை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஹெலசுவய நிறுவனத்தின் உயர் பீட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
