கொரோனா தொற்றுக் காரணமாக காத்தான்குடி பிரதேசம் சுமார் 40 நாட்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் அதனை விடுவிப்பதற்கு காத்தான்குடி நகர சபைத் தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக காத்தான்குடி பிரதேசம் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி தொடக்கம் சுமார் 40 நாட்கள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
காத்தான்குடி நகர பிரதேசம் முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளத் ஆரம்பிப்பதற்கு நகர சபை தலைவர் என்ற வகையில் முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் அது தடுக்கப்பட்டது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நான் கடந்த 8 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தேன்.
இந்த விவகாரத்தில் உள்ளுராட்சி மன்றத் தலைவருக்கு உள்ள முடிவெடுக்கும் அதிகாரம் மறுக்கப்பட்டிருந்ததாக காத்தான்குடி நகர சபைத் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்துக்கு மனுச் செய்திருந்தேன் இந்த குற்றவியல் வழக்கை நீதிவான் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு பிரதிவாதிகளான மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகிய இருவருக்கும் பெப்ரவரி 22ஆம் திகதி நீதிமன்றில் தோன்றுமாறு அழைப்பாணை விடுத்திருந்திருந்தது.
அந்த அழைப்பாணை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கிடைக்கப்பெற்றிருந்தும் உடல் நலமின்மை காரணமாக அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை என்ற காரணம் அவரது சட்டத்தரணிகளுடாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது.
அதனை நிராகரித்த நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்ததோடு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மீண்டுமொரு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(நன்றி - மெட்ரோ)
Reviewed by Editor
on
February 22, 2021
Rating:
